ஜப்பான் முன்னாள் பிரதமர் படுகொலை; தொடர்ந்து கொண்டாடி வரும் சீனா...?
|ஜப்பான் முன்னாள் பிரதமர் அபேவை சுட்டு கொன்றவரை போன்று நடை, உடையுடன் சீன வாலிபர் சவால் விடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
பீஜிங்,
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (வயது 67). அவர் நரா நகரில், தேர்தல் பிரசாரம் ஒன்றில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது, கடந்த 8ந்தேதி துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அபே, தீவிர சிகிச்சை பெற்றும் பலனின்றி உயிரிழந்து விட்டார்.
ஜப்பானின் மேற்கே நரா நகரில் வசிக்கும் அந்நாட்டு கடல்சார் தற்காப்பு படையின் முன்னாள் உறுப்பினரான 41 வயது தெத்சுயா யமகாமி என்பவரால் அபே சுடப்பட்டார். மொத்தம் 2 முறை துப்பாக்கியால் சுடும் காட்சிகள் வீடியோவாக வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இதன்பின்பு, அபேவின் பாதுகாவலர்கள் அவரது உதவிக்கு ஓடி வந்தனர். அவர்களில் சிலர் யமகாமியை ஓடி சென்று பிடித்தனர். ஜப்பான் முன்னாள் பிரதமர் படுகொலையை சீனர்கள் வரவேற்கும் வகையில் நடந்து கொண்டனர் என்ற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது.
இந்த சூழலில், ஷின்சோ அபேயை சுட்டு கொன்ற பின்பு காணப்பட்ட யமகாமியை போன்று சீன வாலிபர் நிற்கும் காட்சிகள் கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அபே சுட்டு கொன்ற நிகழ்வை கேலியாக்கும் வகையில் சீனா நடந்து கொள்வது, ஒரு நாடு எந்தளவுக்கு கீழ்தரமுடன் நடந்து கொள்கிறது என தெரிகிறது என்று சமூக ஊடகங்களில் கண்டனங்களும் எழுந்துள்ளன.
டிக்டாக் உள்ளிட்ட ஊடகங்களில், ஒரு நபருக்கு மற்றொரு நபர் சவால் விடும் வகையில், உடற்பயிற்சி, சமையல், சாகச காட்சிகள் போன்ற சில விசயங்களை செய்வதுண்டு. நல்ல நோக்கத்தில் மரம் நடுவது உள்ளிட்ட விசயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற விசயங்களை மற்றவர்கள் செய்து காட்டுவதுடன், அதற்கு நெட்டிசன்களால் பரவலாக வரவேற்பும் காணப்படுகிறது.
ஆனால் சீனாவில், அபே படுகொலையை ஒரு சவாலாகவே எண்ணி அதுபோன்ற செய்கைகளை செய்து வருகின்றனர். யமகாமி போன்று சாம்பல் நிற உடை அணிந்து, தோளின் குறுக்கே ஒரு பையை அணிந்து கொண்டு புகைப்படத்திற்கு காட்சி கொடுப்பது, வீடியோ வெளியிடுவது ஆகியவற்றை கிண்டலாகவே அவர்கள் எடுத்து கொள்கின்றனர்.
கிழக்கு சீன கடல் பகுதியில் ஜப்பான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே 2012ம் ஆண்டு எல்லை விவகாரம் பதற்றம் ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து, இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.
அபே மீது தாக்குதல் நடந்த பின்பு, சீன சமூக ஊடகத்தில், ஜப்பானுக்கு எதிரான பதிவுகள் பரவியதுடன், யமகாமியை ஒரு ஹீரோ என்று அழைக்கவும் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.