உக்ரைனில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் ரஷிய வீரர்களுக்கு பாதிப்பு- ராணுவ தளபதி தகவல்
|குளிர் அதிகமடைந்துள்ளதால், வீரர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என ரஷிய ராணுவ தளபதி கூறியுள்ளார்.
கீவ்,
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 10 மாதங்களை கடந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் குளிர் காலம் தொடங்கியுள்ளதால் கூடுதல் உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குமாறு கோரி கெமரோவோ ஒப்லாஸ்ட் பகுதியில் உள்ள ரஷிய படை குழுவின் தளபதி செர்ஜி சிவிலியோவ் வெளியிட்ட வீடியோ டுவிட்டரில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் ரஷிய ராணுவ தளபதி செர்ஜி தெரிவித்துள்ளதாவது:
நான் ஸ்டாவ்ரோபோல் நகரின் 247வது படைப்பிரிவின் போர் பயிற்சியாளராக இருக்கிறேன், கெமரோவோ பிராந்தியத்தின் கவர்னரான செர்ஜி யெவ்கெனிவிச்சிடம் நான் முறையிட விரும்புகிறேன். நீங்கள் எங்களுக்கு அனுப்பிய வீரர்கள் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் உள்ளனர். அவர்களிடம் மருந்து பொருட்கள் எதுவும் இல்லை. அவர்கள் கிட்டத்தட்ட பாதுகாப்பாக இல்லை, அவர்களிடம் இரண்டு உடல் கவசங்கள் மட்டுமே உள்ளன.
உக்ரைன் பிரதேசத்தில் மிகவும் குளிராக இருக்கிறது. அந்த குளிரில் இருந்து பாதுகாக்கும் வெப்ப உள்ளாடைகள் வீரர்களிடம் இல்லை, அதனால் குளிரால் அந்த இளம் வீரர்கள் உறைந்து போகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ டுவிட்டரில் 4.27 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், உக்ரைனுக்கு குளிர் கால அவசர உதவியாக கூடுதலாக 1.1 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்க ஐரோப்பிய ஆதரவு நாடுகள் உறுதியளித்துள்ளன. ரஷியாவின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் உக்ரைன் அதிபர் ஜென்ஸ்கி விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.