< Back
உலக செய்திகள்
கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயால் 20 ஆயிரம் பேர் வெளியேற்றம்: இத்தாலியில் விமான நிலையம் மூடல்
உலக செய்திகள்

கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயால் 20 ஆயிரம் பேர் வெளியேற்றம்: இத்தாலியில் விமான நிலையம் மூடல்

தினத்தந்தி
|
25 July 2023 10:52 PM GMT

கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயால் சுமார் 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் இத்தாலியில் விமான நிலையம் மூடப்பட்டது.

ஏதென்ஸ்,

காலநிலை மாற்றம் காரணமாக உலக நாடுகளில் ஆண்டுதோறும் சராசரி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக ஐரோப்பிய நாடுகளில் அதீத மழைப்பொழிவும், கடுமையான வறட்சியும் மாறி மாறி நிலவுகின்றன.

கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்பட பல நாடுகளில் சமீப காலமாக கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் அங்கு பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்துகின்றன.

காட்டுத்தீ

இந்தநிலையில் கிரீசின் சில இடங்களில் அதிகபட்சமாக 40 டிகிரியை தாண்டியை வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனால் அங்குள்ள ரோட்ஸ் தீவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பரவி அதன் அருகில் உள்ள கோர்பு மற்றும் எவியா தீவுகளுக்கும் பரவி வருகிறது.

எனவே பாதுகாப்பு கருதி அங்கிருந்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே இந்த காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுப்பதற்காக சுமார் 100 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 500 வீரர்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள உறுப்பு நாடுகள் அங்கு அனுப்பி உள்ளன.

விமான சேவை ரத்து

இதேபோல் இத்தாலியிலும் அதிக வெப்ப அலை காரணமாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருவதால் புகைமண்டலம் போல காட்சி அளிக்கிறது. எனவே அங்குள்ள பலேர்மோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் விமான பயணங்கள் அங்கு ரத்து செய்யப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இதற்கிடையே வெப்ப அலையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பொதுமக்கள் பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்