< Back
உலக செய்திகள்
பொருளாதார மந்தம் ஏற்பட வாய்ப்பு:  ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம் - அமேசான் நிறுவனர் எச்சரிக்கை
உலக செய்திகள்

பொருளாதார மந்தம் ஏற்பட வாய்ப்பு: ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம் - அமேசான் நிறுவனர் எச்சரிக்கை

தினத்தந்தி
|
22 Nov 2022 10:16 AM IST

பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் உள்ளதால் விடுமுறை காலங்களில் மக்கள் ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம் என அமேசன் நிறுவனர் ஜெப் பெசோஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாஷிங்டன்,

பொருளாதார மந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொது மக்கள் தங்களின் ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும் என்று அமேசான் நிறுவனர் ஜெப் (Jeff) பெசோஸ் கூறியுள்ளார். உலகின் மிகப் பெரிய ஆன்லைன் விற்பனையகமான அமேசானை உருவாக்கி நடத்தி வரும் ஜெப் (Jeff) பெசோஸ், உலகப் பணக்காரர்கள் வரிசையில் நான்காம் இடத்தில் உள்ளார்.

அமெரிக்காவில் பொருளாதார மந்தம் ஏற்பட உள்ளதாக அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்த ஜெப் (Jeff) பெசோஸ், டி.வி, கார் போன்ற அதிக விலை கொண்ட பொருட்களை வாங்குவதை தவிர்க்குமாறு கூறியுள்ளார். ஆடம்பர பொருட்களை வாங்குவதை ஒத்தி வைத்து விட்டு, பொது மக்கள் தங்களின் பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அமேசான் நிறுவனம் மூலம் டிவி உள்ளிட்ட பல்வேறு விலை உயர்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

அமேசான் நிறுவனமும் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் வரலாற்றில் மிகப்பெரிய பணிநீக்கங்களில் ஒன்றாக இது உள்ளது. ஏற்கெனவே ட்விட்டர், மெட்டா போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான சிஸ்கோவும் 4000 பணியாளர்களை நீக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் அமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலக மக்களே அச்சத்தில் உறைந்துள்ளனர்.

செலவுகளை குறைக்க, டிவிட்டர், பேஸ்புக், அமேசான் உள்ளிட்ட பல்வேறு டெக் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

உலக பொருளாதார நிலை காரணமாக வளர்ச்சி குறைந்தாலும் இந்தியாவில் மந்தநிலை ஏற்படுதற்கான வாய்ப்பு இல்லை என நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்