போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கைது எதிரொலி - மெக்சிகோவில் வெடித்த வன்முறை
|மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டதால் அங்கு பெரும் வன்முறை மூண்டது.
மெக்சிகோ சிட்டி,
உலகிலேயே போதைப்பொருள் புழக்கம் அதிகளவில் உள்ள நாடுகளில் மெக்சிகோவும் ஒன்று. அங்கு ஏராளமான போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் உள்ளன. இந்த கும்பல்கள் மெக்சிகோவில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு போதைப்பொருட்களை கடத்துகின்றன.
அந்த வகையில் மெக்சிகோவின் சினாலாவோ மாகாணத்தில் செயல்பட்டு வரும் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் தான் ஜோகின் குஸ்மான் லோரா என்கிற எல் சாப்போ. உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் மன்னனாக அறியப்படும் எல் சாப்போ தற்போது அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எல் சாப்போ கைது செய்யப்பட்டதற்கு பிறகு அவரது போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக அவரது மூத்த மகனான ஓவிடியோ குஸ்மான் லோபஸ் செயல்பட்டு வந்தார். ''தி மவுஸ்'' என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் இவரை மெக்சிகோ மற்றும் அமெரிக்க போலீசார் பல ஆண்டுகளாக தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் சினாலாவோ மாகாணத்தில் இருந்தவாறே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தி வந்தார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிகாரிகளின் உதவியோடு கடந்த 6 மாதங்களாக லோபசின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்த மெக்சிகோ போலீசார் நேற்று முன்தினம் சினாலாவோ மாகாணத்தின் குலியாகன் நகரில் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். உடனடியாக அவர் அந்த நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டிக்கு மாற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் லோபஸ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் சினாலாவோ மாகாணம் முழுவதும் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சாலைகளில் வலம் வந்த அவர்கள் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களை மறித்து தீ வைத்தனர்.
அதோடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். மாகாணம் முழுவதும் பல இடங்களில் பாதுகாப்பு படையினருக்கும், போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 3 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்ததாகவும், 18 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே குலியாகன் நகரில் உள்ள விமான நிலையத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி போதைப்பொருள் கடத்தல் கும்பல் அங்கு பயணிகளுடன் புறப்படுவதற்கு தயாராக இருந்த விமானத்தின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். விமானத்துக்குள் இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் அலறி துடித்தனர். அவர்கள் இருக்கைகளை விட்டு இறங்கி கீழே படுத்தனர்.
எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் பயணிகளுக்கும், விமான ஊழியர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதே போல் அந்த விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானப்படை விமானத்தின் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தொடர் வன்முறையால் சினாலாவோ மாகாணம் முழுவதும் கடும் பதற்றம் நீடிக்கிறது.