< Back
உலக செய்திகள்
கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும்: போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்

கோப்புப்படம் 

உலக செய்திகள்

கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும்: போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
4 Sept 2022 5:51 PM IST

இலங்கைக்கு திரும்பியுள்ள கோத்தபய ராஜபக்சேவை கைதுசெய்யவேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கொழும்பு,

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார். மாலத்தீவு, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் தஞ்சம் அடைந்திருந்த அவர் 51 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் நள்ளிரவு இலங்கை திரும்பினார்.

முன்னாள் அதிபரான கோத்தபய ராஜபக்சேவுக்க இலங்கை அரசு சார்பில் கொழும்பில் பங்களா ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த பங்களாவில் அவர் தங்கியுள்ளார். பங்களாவை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். முன்னாள் அதிபர் ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் கோத்தபய ராஜபக்சேவுக்கு கொடுக்கப்படும் என்று இலங்கை அதிபரின் செயலாளர் சமன் ஏக நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் மற்றும் சில தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக ஆசிரியர் தொழிற்சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கூறும்போது, "இலங்கையில் உள்ள 2.2 கோடி மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்தியதற்காக அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

கோத்தபய ராஜபக்சேவை எந்த நாடும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அவர் மறைந்திருக்க இடமில்லை என்பதால் நாடு திரும்பியுள்ளார். எதுவும் நடக்காதது போல் அவரால் சுதந்திரமாக வாழ முடியாது என்றார். இதே போன்று கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர்.

கோத்தபய ராஜபக்சே நாடு திரும்பியது குறித்து இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜி ஜன பலவேகயா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறும்போது, கோத்தபய ராஜபக்கே மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்றார். முன்னாள் எம்.பி. அஜித் பெரைரா கூறும்போது, "அதிபர் பதவிக்கு முன்னரும், அதிபராக இருந்த காலத்திலும் கோத்தபய ராஜபக்சே செய்த குற்றங்களுக்கு அவர் பொறுப்பு ஏற்க வேண்டும்" என்றார்.

மேலும் செய்திகள்