கிர்கிஸ்தான் - தஜிகிஸ்தான் இடையே பயங்கர மோதல் ; அதிகரிக்கும் பதற்றம் - 27 பேர் பலி
|கிர்கிஸ்தான் - தஜிகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 27 பேர் உயிரிழந்தனர்.
பெட்கன்,
கிர்கிஸ்தான் - தஜிகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஒருங்கிணைந்த சோவியத் யூனியனில் அங்கம் வகித்தன. சோவியத் யூனியன் பிளவுபட்ட பின்னர் கிர்கிஸ்தான் - தஜிகிஸ்தான் என இரு நாடுகளும் பிரிந்தன.
இரு நாடுகளுக்கும் சுமார் 1 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை எல்லைகளாக பகிர்கின்றன. எல்லை முழுவதும் வரையறுக்கப்படாததால் அவ்வப்போது இரு நாடுகளுக்கு இடையேயும் பிரச்சினை நிலவி வருகிறது. இந்த பிரச்சினைகள் இரு நாட்டு ராணுவத்திற்கு இடையேயான மோதலுக்கும் வழிவகுக்கிறது.
இந்நிலையில், கிர்கிஸ்தான் - தஜிகிஸ்தான் இடையே எல்லையில் மீண்டும் மோதல் வெடித்தது. எல்லையில் அத்துமீறி தங்கள் 2 கிராமங்கள் மீது தஜிகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக கிர்கிஸ்தான் குற்றஞ்சாட்டியது. அதேவேளை, தங்கள் 7 கிராமங்கள் மீது கிர்கிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக தஜிகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த மோதலில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
தங்கள் தரப்பில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக கிர்கிஸ்தான் தெரிவித்துள்ளது. அதேவேளை, தஜிகிஸ்தானில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.