பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அர்ஜெண்டினா - பணவீக்கம் 78.5% ஆக உயர்வு
|அர்ஜெண்டினாவில் பணவீக்கம் 100 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புவனோஸ் ஏரெஸ்,
உக்ரைன் போர், ஐரோப்பாவில் எரிசக்தி பற்றாக்குறை அச்சுறுத்தல், விநியோக சங்கிலி இடையூறுகள் உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை உருவாகி வருகிறது. பல்வேறு நாடுகளில் எரிவாயு, அத்தியவாசிய பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் நிலைமை இன்னும் மோசமாகக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நிலையில் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி அங்கு பணவீக்கம் 78.5% ஆக உயர்ந்துள்ளதாகவும், இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிக அதிகமான சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலை தொடர்ந்தால் நடப்பாண்டில் அர்ஜெண்டினாவில் பணவீக்கம் 100 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அர்ஜெண்டினாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள போதிலும், அங்கு இந்த ஆண்டு பொருளாதாரம் பிராந்திய சராசரியை விட 4% உயரும் என உலக வங்கி கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.