ஆண்டனி பிளிங்கன்-ஜெய்சங்கர் சந்திப்பு, செங்கடல் தாக்குதல் குறித்து பேச்சுவார்த்தை
|செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல், காசாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்து ஆண்டனி பிளிங்கன் பேசியதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்,
செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். இதனை எதிர்த்து அமெரிக்கா ராணுவத்தின் போர் கப்பல்கள் செங்கடல் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று இந்தியாவின் மத்திய மந்திரி ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் சந்தித்தனர். இந்த சந்திப்பில், இருவரும் செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல், காசாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்து விவாதித்தனர்.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியதாவது,
'செங்கடல் சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்கும் ஒரு பெரிய வணிகத் தாழ்வாரம் என்று பிளிங்கன் வலியுறுத்தினார். ஜெய்சங்கர் மற்றும் பிளிங்கன் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல், தீவிரமடைவதைத் தடுப்பதற்கான முயற்சிகள் மற்றும் காசாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்தும் விவாதித்தனர். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போர் குறித்தும் பிளிங்கன் விவாதித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பு குறித்து மத்திய மந்திரி ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எங்கள் உரையாடல் கடல்சார் பாதுகாப்பு சவால்களில் கவனம் செலுத்தியது, குறிப்பாக செங்கடல் பிராந்தியம். காசா உட்பட மேற்கு ஆசியாவில் நிலவும் நிலைமை குறித்த அவரது நுண்ணறிவுகளை பாராட்டினார்
உக்ரைன் மோதல் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து அவர் பார்வைகளை பரிமாறிக் கொண்டார். 2024 ஆம் ஆண்டிற்கான எங்கள் விரிவான ஒத்துழைப்பு நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம்' என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.