< Back
உலக செய்திகள்
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்; 2 பேர் சுட்டு கொலை
உலக செய்திகள்

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்; 2 பேர் சுட்டு கொலை

தினத்தந்தி
|
9 Oct 2022 11:23 AM IST

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

தெஹ்ரான்,


ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன்படி, பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்நாட்டின் தெஹ்ரான் நகரில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த மாதம் 17-ம் தேதி உயிரிழந்து உள்ளார்.

இதனை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 154 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த சூழலில், சனந்தஜ் மற்றும் சாக்கிஜ் பகுதிகளில் பள்ளி மாணவ மாணவியர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

அவர்களை கட்டுப்படுத்த ராணுவ படைகள் களமிறங்கின. இதில், சனந்தஜ் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காரில் இருந்த ஓட்டுனர் ஒருவர் பலத்த காயமடைந்து பலியானார்.

சாக்கிஜ் நகரில் பள்ளியில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 ஆசிரியர்கள் காயமடைந்தனர். இதனை ஹெங்காவ் என்ற ஈரான் நாட்டு மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்து உள்ளது.

ஈரானின் காவல் படை நடத்திய துப்பாக்கி சூட்டில் மற்றொரு போராட்டக்காரரின் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர் உயிரிழந்து உள்ளார். ஈரானின் சாக்கிஜ், திவாந்தரெ, மகபத் மற்றும் சனந்தஜ் ஆகிய நகரங்களில் பரவலாக போராட்டம் தீவிரமடைந்து உள்ளது என ஹெங்காவ் அமைப்பு தெரிவித்து உள்ளது. இதுவரை நாடு முழுவதும் 154 பேர் பலியான நிலையில், இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 60 என்ற அளவிலேயே ஈரான் அரசு தொடர்புடைய ஊடக தகவல் குறிப்பிட்டு வருகிறது.

மேலும் செய்திகள்