< Back
உலக செய்திகள்
மெக்சிகோவில் மற்றொரு கடுமையான நிலநடுக்கம்:  ரிக்டரில் 6.8 ஆக பதிவு
உலக செய்திகள்

மெக்சிகோவில் மற்றொரு கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 6.8 ஆக பதிவு

தினத்தந்தி
|
22 Sept 2022 3:34 PM IST

மெக்சிகோ நாட்டில் ஒரு சில நாட்களுக்கு பின் மற்றொரு கடுமையான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டு மக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.


மெக்சிகோ சிட்டி,


மெக்சிகோ நாட்டின் மெக்சிகோ சிட்டி அருகில் உள்ள மேற்கு மைக்கோகன் மாகாணத்தில் கடந்த திங்கட் கிழமை மதியம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு கோல்கோமன் நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் தாக்கியது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 புள்ளிகளாக பதிவானது. மேலும் இது பூமிக்கு அடியில் 15 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக மெக்சிகோவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.

இந்த பயங்கர நிலநடுக்கம் மைக்கோகன் மாகாணம் மட்டும் இன்றி அதனை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் தலைநகர் மெக்சிகோ சிட்டியையும் கடுமையாக உலுக்கியது. சில வினாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தின்போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின.

இதனால் மக்கள் அலறியடித்தபடி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் எதிரொலியாக பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. குறிப்பாக மைக்கோகன் மாகாணத்தில் ஆஸ்பத்திரிகள் உள்பட எண்ணற்ற பழமையான கட்டிடங்கள் இடிந்து விழுந்து சின்னபின்னமாகின. அதேபோல் அண்டை மாகாணமான கோலிமாவின் மன்சானிலோ நகரில் வணிக வளாகம் ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் மக்கள் கடும் பீதியடைந்த நிலையில் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை திரும்பப்பெறப்பட்டது.

இதற்கு முன் 2 முறை நாட்டை அதிரவைத்த அதே செப்டம்பர் 19-ந்தேதி மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது மெக்சிகோ மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், நிலநடுக்க பாதிப்பில் இருந்து மக்கள் மீள்வதற்குள் இன்று மற்றொரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்நிலநடுக்கம் அகுய்லில்லா பகுதியில் இருந்து தெற்கு-தென்மேற்கே 46 கி.மீ. தொலைவில் பதிவாகி உள்ளது. எனினும், நிலநடுக்கம் தொடர்ச்சியாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

மேலும் செய்திகள்