குவைத் தீ விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஒரு இந்தியர் பலி: பலி எண்ணிக்கை 50 ஆனது
|50 பேரை காவு வாங்கிய இந்த தீ விபத்துக்கு மின் கசிவே காரணம் என கூறப்படுகிறது.
குவைத் சிட்டி,
குவைத்தில் கடந்த 12-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் பலியாகி இருந்தனர். மேலும் சுமார் 50 பேர் காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலியானவர்களில் 45 பேர் இந்தியர்கள், 3 பேர் பிலிப்பைன்சை சேர்ந்தவர்கள் ஆவர். ஒரு உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்கள் நேற்று இந்தியா கொண்டு வரப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இந்தியர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்து உள்ளார். இதன் மூலம் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 46 ஆகவும், மொத்த எண்ணிக்கை 50 ஆகவும் உயர்ந்திருக்கிறது.
50 பேரை காவு வாங்கிய இந்த தீ விபத்துக்கு மின் கசிவே காரணம் என குவைத் தீயணைப்புத்துறை கூறியிருந்தது. அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள காவலாளி அறையில் ஏற்பட்ட மின் கசிவே இந்த கோர சம்பவத்துக்கு காரணமாகி இருப்பதாக அதிகாரிகள் நேற்று உறுதிப்படுத்தினர்.