இஸ்ரேல்-ஹமாஸ் போர்.. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தீவிரமடையும் மாணவர் போராட்டம்
|இஸ்ரேலிய இன வேற்றுமை, இனப்படுகொலை மற்றும் பாலஸ்தீன ஆக்கிரமிப்பினால் லாபம் ஈட்டும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழகம் விலக வேண்டும் என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்தினர்.
நியூயார்க்:
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் காசாவில் உள்ள அப்பாவி பாலஸ்தீனர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், தாக்குதல் நீடிக்கிறது. போரை நிறுத்தும்படி பல்வேறு நாடுகள் வலியுறுத்தின. எனினும், ஹமாசை முற்றிலும் ஒழிக்கும் வரை தாக்குதலை நிறுத்தமாட்டோம் என இஸ்ரேல் உறுதியாக உள்ளது. இதனால் காசாவின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துள்ளது. காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு எதிராக பாலஸ்தீனர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவ்வகையில், அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் நீட்சியாக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர், காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி ஆகியவற்றால் ஆத்திரமடைந்த மாணவர்கள், பல்கலைக்கழக வளாகங்களில் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.
நேற்று நடந்த போராட்டங்களில், பல்கலைக்கழக நிர்வாகிகள் மற்றும் போலீசாருடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் வகுப்பறைகள் மூடப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
பரவி வரும் போராட்டத்தின் மையப்பகுதியாக இருக்கும் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. இஸ்ரேலிய இன வேற்றுமை, இனப்படுகொலை மற்றும் பாலஸ்தீன ஆக்கிரமிப்பினால் லாபம் ஈட்டும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழகம் விலக வேண்டும் என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்தினர்.
இந்த போராட்டம் காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு இல்லை என்று இஸ்ரேல் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மிரட்டல் மற்றும் வெறுப்பு பேச்சுகளை பல்கலைக்கழக வளாகங்கள் ஊக்குவிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுபற்றி கொலம்பியாவின் பொது விவகாரங்கள் துறை துணை தலைவர் பென் சாங் கூறுகையில், "மாணவர்கள் போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது. ஆனால் அவர்கள் கல்வி நிறுவன வளாகத்தில் இயல்பு நிலையை சீர்குலைக்கவோ அல்லது மற்றவர்களை துன்புறுத்தவோ மிரட்டவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்றார்.
இதற்கிடையில், யூத விரோத நிகழ்வுகள் நடப்பதாக கூறும் குற்றச்சாட்டுகளை காசா ஒற்றுமை முகாமில் உள்ள பல யூத மாணவர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் மறுத்துள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள யூத மாணவர்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்றும், வகுப்பறையை விட்டு மாணவர்களை வெளியேற்றும் அளவுக்கு இது ஆபத்தானது என்றும் குடியரசு கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் மைக் ஜான்சன் கூறினார்.