உக்ரைனில் இருந்து சிறுத்தைகளை மீட்டு தர மத்திய அரசுக்கு ஆந்திர டாக்டர் கோரிக்கை
|உக்ரைனில் இருந்து சிறுத்தைகளை மீட்டு தர மத்திய அரசுக்கு ஆந்திர டாக்டர் கோரிக்கை விடுத்துள்ளார்.
லண்டன்,
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எலும்பியல் மருத்துவரான கிரிகுமார் பாட்டீல் உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் டான்பாஸ் மாகாணத்தில் உள்ள செவரோடோனெட்ஸ்க்கி நகரில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார்.
இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையை விலைக்கு வாங்கி வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்தார். இந்த சூழலில்தான் கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கியது. போர் காரணமாக உக்ரைனில் வசித்து வந்த இந்தியர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறிய நிலையில், தனது செல்லப்பிராணிகளை விட்டு பிரிய மனம் இல்லாமால் கிரிகுமார் தொடர்ந்து அங்கேயே வசித்து வந்தார்.
போருக்கு மத்தியில் தனது வீடு, கார், மோர்ட்டார் சைக்கிள் போன்றவற்றை விற்று தனது செல்லப்பிராணிகளுக்கு உணவு அளித்து வந்தார். இந்த நிலையில் கிரிகுமாரிடம் இருந்த பணம் முழுவதும் செலவழிந்து, விற்பதற்கு அவரிடம் வேறு எந்த சொத்தும் இல்லாத நிலை உருவானது. இதனால் அண்டை நாடான போலாந்து சென்று பணம் சம்பாதித்து வரலாம் என முடிவு செய்த அவர் கனத்த இதயத்துடன் தனது செல்லப்பிராணிகளை பிரிந்து போலந்து சென்றார்.
அப்போதும் கூட அவர் தனது செல்லப்பிராணிகளை பராமரிக்க ஒருவரை வேலைக்கு அமர்த்திவிட்டுதான் சென்றார். தற்போது போலந்து நாட்டின் தலைநகர் வார்ஷாவில் தஞ்சமடைந்துள்ள கிரிகுமார் உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ளதால் தனது செல்லப்பிராணிகளான 2 சிறுத்தைகளையும் பத்திரமாக மீட்டுத்தர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.
உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் எந்த உதவியும் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக கூறியதை தொடர்ந்து கிரிகுமார் நேரடியாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.