லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி குடும்பத்துடன் பலி
|லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்.
பெரூட்,
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.
அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர்.
அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி முதல் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
மேலும், லெபனானுக்குள் புகுந்து இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், லெபனானின் வடக்கு பகுதியில் உள்ள திரிபொலி நகரின் பெட்டாவி பகுதியில் பாலஸ்தீனியர்கள் வசித்து வரும் அகதிகள் முகாம் உள்ளது. அந்த முகாமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் ராணுவ பிரிவான குவாசம் பிரிகேடிசின் முக்கிய தளபதி சயது அதுல்லா அலி கொல்லப்பட்டார். சயது வசித்துவந்த வீட்டின் மீது இஸ்ரேல் விமானப்படை துல்லிய தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தளபதி சயது அதுல்லா அலி அவரது மனைவி ஷியாமா அசீம், இரு மகள்கள் சைனப், பாத்திமா என குடும்பத்தினர் 4 பேரும் உயிரிழந்தனர்.