போர் பதற்ற சூழலில் இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு எச்சரிக்கை
|ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகர் கமல் கர்ராசி, இஸ்ரேலுக்கு அணுகுண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெஹ்ரான்,
கடந்த ஏப்ரல் மாதம் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை தாக்கியது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சில வாரங்களாகவே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் போருக்கான பதற்ற நிலை நீடித்து வருகிறது.
இந்த நிலையில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர் கமல் கர்ராசி, இஸ்ரேலுக்கு அணுகுண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக கமல் கர்ராசி கூறியதாவது:-
"அணுகுண்டை உருவாக்கும் முடிவு எங்களிடம் இல்லை. ஆனால் ஈரானின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எங்கள் இராணுவக் கோட்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. இஸ்ரேல் எங்களது அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால், எங்கள் தடுப்பு மாறும். அணுகுண்டுகள் தயாரிப்போம்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் ஈரானின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரபேல் கிராசி தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், தற்போதைய நிலை முற்றிலும் திருப்திகரமாக இல்லை. இதை மாற்ற வேண்டும்" என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு, அறிவிக்கப்படாத இடங்களில் காணப்படும் யுரேனியம் துகள்களை ஆய்வு செய்வதற்கும் கண்காணிப்புக் கருவிகளை மீண்டும் நிறுவுவதற்கும் உதவுவதாக ஈரான் உறுதியளித்தது. ஆனால் இந்த உறுதிமொழியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று சர்வதசே அணுசக்தி முகமை குறிப்பிட்டுள்ளது.