< Back
உலக செய்திகள்
அமெரிக்காவின் முதல் நைட்ரஜன் வாயு மரண தண்டனை; காலக்கெடு தொடங்கியது
உலக செய்திகள்

அமெரிக்காவின் முதல் நைட்ரஜன் வாயு மரண தண்டனை; காலக்கெடு தொடங்கியது

தினத்தந்தி
|
25 Jan 2024 4:32 PM GMT

நைட்ரஜன் வாயுவை செலுத்தி தண்டனையை நிறைவேற்றும் உத்தரவை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்து உள்ளது.

நியூயார்க்,

அமெரிக்காவில் கடந்த 1988-ம் ஆண்டு சார்லஸ் சென்னட் என்பவர், அவருடைய மனைவி எலிசபெத் சென்னட்டை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார். எலிசபெத்தின் பெயரில் பெரிய அளவில் காப்பீடு ஒன்றை சார்லஸ் எடுத்திருக்கிறார். அந்த தொகைக்காக, மனைவியை கொலை செய்ய முடிவு செய்து அதற்காக கென்னத் யூஜின் ஸ்மித் என்பவருக்கு பணம் கொடுத்துள்ளார்.

ஸ்மித் அவருடைய கூட்டாளியுடன் சேர்ந்து சார்லசின் மனைவியை தொடர்ந்து அடித்தும், ஆயுதம் கொண்டு தாக்கியும், குத்தியும் படுகொலை செய்துள்ளார். இதன்பின்னர் கணவர் சார்லஸ் தற்கொலை செய்து கொண்டார். ஸ்மித்தின் கூட்டாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு 2010-ம் ஆண்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த சூழலில், ஸ்மித்துக்கு 2022-ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்ற முடிவானது. இதற்காக ஊசி வழியே தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதிகாரிகளால் அவருடைய உடலில் மருந்து செல்லும் இணைப்பை சரியாக மேற்கொள்ள முடியவில்லை. இதனால், முதல் முயற்சியில் ஸ்மித் தப்பினார்.

2-வது முறையாக 2023-ம் ஆண்டு மே மாதத்தில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. இதற்கு எதிராக ஸ்மித் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அமெரிக்க அரசியல் சாசன விதிமீறல் என வாதிடப்பட்டது.

இந்த சூழலில், ஸ்மித்துக்கு நைட்ரஜன் வாயுவை செலுத்தி தண்டனையை நிறைவேற்றும் உத்தரவை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்து உள்ளது. அந்நாட்டில் முதன்முறையாக இந்த வழியில் மரண தண்டனையானது நிறைவேற்றப்படுகிறது.

இதன்படி, தூய்மையான நைட்ரஜன் செலுத்தப்படும். இதற்கான 30 மணிநேர கால அளவு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இன்று (வியாழன்) அதிகாலை 12 மணியளவில் தொடங்கிய இந்த காலஅளவு அடுத்த நாள் காலை 6 மணிக்கு நிறைவடையும்.

சிறை கைதியை கட்டி வைத்து விடுவார்கள். அவருக்கு முக கவசம் அணிவிக்கப்படும். அதனுடன் சுவாச குழாய் ஒன்றும் இணைக்கப்படும். சுவாசிக்கும் காற்றுக்கு பதிலாக, அதன் வழியே தூய்மையான நைட்ரஜன் செலுத்தப்படும். இதனால், சில வினாடிகளில் அந்நபரின் சுயநினைவை இழக்க செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில நிமிடங்களில் அந்த நபருக்கு மரணம் ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இது தெரிந்தவரை, வலியில்லாத மற்றும் இரக்கம் கொண்ட மரண தண்டனையாகும் என்றும் தெரிவித்தனர். இதனால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு அந்நபருக்கு மரணம் ஏற்படும்.

மேலும் செய்திகள்