< Back
உலக செய்திகள்
அமெரிக்க ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது: எதிர்க்கட்சியினரை குற்றம்சாட்டிய ஜனாதிபதி ஜோ பைடன்
உலக செய்திகள்

அமெரிக்க ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது: எதிர்க்கட்சியினரை குற்றம்சாட்டிய ஜனாதிபதி ஜோ பைடன்

தினத்தந்தி
|
3 Nov 2022 9:40 AM IST

அமெரிக்காவில் ஜனநாயகம் மற்றும் அரசியல் வன்முறை, அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேசினார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்று ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.

அமெரிக்காவில் எந்தவொரு ஜனாதிபதி பதவிக்கு வந்தாலும் அவரது 4 ஆண்டு பதவிக்காலத்தின் மத்தியில் (2 ஆண்டுகளுக்குபின்) நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும். இது இடைக்கால தேர்தல் ('மிட்டேர்ம் போல்ஸ்') என அழைக்கப்படுகிறது.

அந்த வகையில் அங்கு ஜோ பைடன் ஜனாதிபதியாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், அவருடைய பதவிக்காலத்தில் மத்தியில், வரும் 8-ந் தேதி நாடாளுமன்ற கீழ்சபையில் உள்ள (பிரதிநிதிகள் சபை) மொத்த இடங்களான 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட் சபையில் மொத்தம் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தல் வெற்றி, 2024-ம் ஆண்டு அங்கு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்தக்கட்சி ஜெயிக்கப்போகிறது என்பதற்கு சமிக்ஞையாக அமையும்.

இந்த நிலையில், ஜனநாயகம் மற்றும் அரசியல் வன்முறைக்கான அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேசியதாவது:-

அமெரிக்க ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஏனெனில், தோற்கடிக்கப்பட்ட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி, 2020ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்துள்ளார். அவர் மக்களின் விருப்பத்தை ஏற்க மறுக்கிறார். தான் தோற்றுப் போனதை ஏற்க மறுக்கிறார் அவர்.

அமெரிக்காவில் வாக்காளர் மிரட்டல் அல்லது அரசியல் வன்முறைக்கு இடமில்லை என்று சொல்ல வேண்டும், ஜனநாயகக் கட்சியினரையோ அல்லது குடியரசுக் கட்சியினரையோ யாரை குறிவைத்தாலும், ஒரு நாடாக நாம் ஒரே பெரும், ஒன்றுபட்ட குரலில் பேச வேண்டும்.

ஜனநாயகக் கட்சியினருக்கு, குடியரசுக் கட்சியினருக்கு மற்றும் பிற மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மிரட்டல் என்பது அதிகாரத்தை கைப்பற்றவும் லாபத்திற்காகவும் சொல்லப்பட்ட பொய்களால் ஏற்பட்டது. சதிக்காகச் சொல்லப்பட்ட பொய்களால் ஏற்பட்ட விளைவு இது. கோபம், வெறுப்பு மற்றும் வன்முறையை உருவாக்க மீண்டும் மீண்டும் பொய்கள் சொல்லப்பட்டன.

இந்த தருணத்தில், அந்த பொய்களை நாம் உண்மையுடன் எதிர்கொள்ள வேண்டும், நமது தேசத்தின் எதிர்காலம் இதைப் பொறுத்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்