ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு வழியில் திடீர் மாரடைப்பு; அடுத்து நடந்த திருப்பம்
|இங்கிலாந்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு வழியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதும் அவரை நோயாளி மற்றும் நர்ஸ் உடனடியாக செயல்பட்டு காப்பாற்றி உள்ளனர்.
லண்டன்,
இங்கிலாந்து நாட்டில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருப்பவர் ஷான் மெக்பிரைடு. இந்நிலையில், டாமி ஸ்டூவர்ட் (வயது 72) என்ற நோயாளியை பஞ்சோரி பகுதியில் உள்ள கிளென் ஓ டீ மருத்துவமனையில் இருந்து அபர்தீன் ராயல் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய பணியில் ஷான் ஈடுபட்டார்.
இந்நிலையில், ஆம்புலன்சை ஓட்டி கொண்டிருந்தபோது, திடீரென ஷானுக்கு மாரடைப்பு ஏற்பட்டு சரிந்துள்ளார். சக்கர நாற்காலியில் இருந்த ஸ்டூவர்ட் உடனடியாக தொலைபேசி வழியே அழைத்து, உதவி கேட்டுள்ளார்.
உடன் இருந்த நர்ஸ் பிரேயா ஸ்மித்-நிக்கோல் (வயது 28), மற்றொரு ஆம்புலன்ஸ் வரும் வரை ஷானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். அவர் 25 நிமிடங்கள் வரை தொடர்ந்து காப்பாற்றும் பணியில் ஈடுபட்டார்.
இதன்பின் மற்றொரு ஆம்புலன்ஸ் வந்து அவரை மீட்டு, சிகிச்சை அளித்து காப்பாற்றி விட்டனர். இந்த சம்பவத்திற்கு பின்னர், 3 பேரும் சந்தித்து பேசி கொண்டனர். ஷானுக்கு அப்போது நடந்த விசயங்கள் எதுவும் நினைவில்லை.
ஆனால் ஷானுக்கு மற்றொரு முறை வாழ்வு கிடைக்க வழிசெய்ததற்காக நர்ஸ் நிக்கோலுக்கும், முதியவருக்கும் அவர் நன்றி தெரிவித்து கொண்டார். அவர்கள் இருவரும் இல்லை என்றால் தற்போது நானில்லை என கூறிய ஷான், நாளை என்ன நடக்கும் என தெரியாது. அதனால், இன்றைக்கு வாழுங்கள் என்று கூறியுள்ளார்.