நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தகராறு - ஒருவருக்கு கத்திக்குத்து
|புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட குழு மோதல் காரணமாக தாக்குதல் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. இதனிடையே அங்கு இரண்டு நபர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, அதில் ஒரு நபர் மற்றொருவரை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் தாக்குதல் நடத்திய அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதில் காயமடைந்த 41 வயது நபர், உடலில் ரத்த காயங்களோடு அங்கிருந்த போலீஸ் வாகனத்திற்கு அருகே சென்று உதவி கேட்டுள்ளார். இதையடுத்து போலீசார் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது மார்பு மற்றும் முதுகு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், காயமடைந்த 41 வயது நபர் குற்றப்பின்னனியை கொண்டவர் என்பதும், ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் அவர் 25 முறை கைது செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட குழு மோதல் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.