< Back
உலக செய்திகள்
சிரியாவின் விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் என குற்றச்சாட்டு
உலக செய்திகள்

சிரியாவின் விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் என குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
12 Oct 2023 7:00 PM IST

சிரியாவின் டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது என சிரியா குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்பு படையும் பதிலடி கொடுத்து வருகிறது. காசா பகுதியில் உள்ள கட்டிடங்களை இலக்காக கொண்டு வான்வழி தாக்குதல்களை நடத்துகிறது.

இஸ்ரேலுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. காசாவுக்கு ஈரான் ஆதரவு தருகிறது என கூறப்படுகிறது. இந்நிலையில், லெபனானில் இருந்தும் ஹமாஸ் படைகள் தாக்குதல் நடத்தியது. இது இஸ்ரேலுக்கு ஆத்திரம் ஏற்படுத்தியது. இதனால், லெபனான் மீதும் இஸ்ரேல் படைகள் தாக்குதலை தொடுத்தன.

தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் காசா என இரு தரப்பிலும் போர் பதற்றம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தாக்குதல்களுக்கு அதிக இலக்காகி உள்ளனர்.

இந்த நிலையில், சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ ஆகிய 2 விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது என சிரியா குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, மத்திய காசா பகுதியில் உள்ள நுசிராத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 18 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.

காசாவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லும்படி வானில் இருந்து நோட்டீஸ்களை வீசி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்து உள்ளது. காசா மீது தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி உள்ளிட்டவை இன்றி காசா நகர மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த தாக்குதல் மற்றும் எச்சரிக்கையால், அதிக இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்