அல்ஜீரியா-இந்தியா இடையே நட்புக்கான நெருங்கிய பிணைப்பு உள்ளது: ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
|அல்ஜீரியா புவியியல் அமைப்பின்படி தொலைவில் இருந்தபோதும், அந்நாட்டுடன் இந்தியா நெருங்கிய பிணைப்பை பராமரித்து வருகிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியுள்ளார்.
அல்ஜீர்ஸ்,
அல்ஜீரியா, மொரீசேனியா மற்றும் மலாவி ஆகிய 3 ஆப்பிரிக்க நாடுகளில், ஜனாதிபதி திரவுபதி முர்மு வரலாற்று சிறப்புமிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 13 முதல் 19 வரையிலான நாட்களில் அவருடைய சுற்றுப்பயணம் அமைகிறது.
இந்நிலையில், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகருக்கு சென்றடைந்த ஜனாதிபதி முர்முவுக்கு நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் மற்றும் அவருடைய மந்திரி சபை உறுப்பினர்கள் வரவேற்றனர். இதன்பின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை முர்மு ஏற்று கொண்டார்.
அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய ஜனாதிபதி என்னும் பெருமையை முர்மு பெற்றுள்ளார். அவருடன் இந்திய சமூகத்தினர் ஒன்றாக சேர்ந்து, குழு புகைப்படம் ஒன்றை எடுத்து கொண்டனர். இதன்பின்னர், இந்திய சமூகத்தினரின் குழந்தைகளுக்கு அன்பு பரிசுகளை வழங்கி அவர்களுடன் முர்மு உரையாடினார்.
இந்த சுற்றுப்பயணத்தில், அந்நாடுகளின் தலைவர்களுடன் அவர் இருதரப்பு கூட்டங்களை நடத்தி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதேபோன்று, இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுடனும் முர்மு உரையாட உள்ளார்.
இந்நிலையில், இந்திய சமூகத்தினர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முர்மு, இரு நாடுகளும் புவியியல் அமைப்பின்படி தொலைவில் இருந்தபோதும், அல்ஜீரியா சுதந்திரம் பெற்றதில் இருந்து நாடுகள் இரண்டும் நெருங்கிய பிணைப்பை பராமரித்து வருகிறது. நம் நாட்டு தலைவர்கள், அல்ஜீரியாவின் தலைவர்களுடன் எப்போதும் நல்ல முறையிலான உறவை கொண்டிருக்கின்றனர் என்று பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், உலக வளர்ச்சியில் இந்தியா ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுக்கு 8 சதவீதம் என்ற நிலையான வளர்ச்சியுடன், விரைவாக வளர்ந்து வரும் மிக பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகி வருகிறது. நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்வோரின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்துள்ளது.
உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகியிருப்பது பெருமைக்குரிய ஒரு விசயம் என்று அவர் பேசியுள்ளார். இந்த பயணத்தில், நாளை மறுநாள் (16-ந்தேதி) அவர் மொரிசேனியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுதந்திரம் அடைந்த பின்னர் இந்திய தலைவர் ஒருவர் அந்நாட்டுக்கு செல்வது இதுவே முதன்முறையாகும்.
17-ந்தேதி மலாவி நாட்டுக்கு சென்று அந்நாட்டு ஜனாதிபதி லாசரஸ் சக்வேராவை நேரில் சந்தித்து பேசுகிறார். அவர், வர்த்தக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதுடன், இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து உரையாடுகிறார். இதன்பின்னர் அவருடைய சுற்றுப்பயணம் நிறைவடைந்ததும், 19-ந்தேதி மலாவி நாட்டில் இருந்து இந்தியாவுக்கு புறப்படுகிறார்.