'அலெக்சி நவால்னி துணிச்சல் மிக்கவர்' - அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்
|அலெக்சி நவால்னி மீண்டும் ரஷியாவுக்கு சென்றிருக்கக் கூடாது என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
வாஷிங்டன்,
ரஷிய அதிபர் புதினையும், அவரது கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி (வயது 47). இதனால் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் இவர் மீதான ஆதரவு பெருகியது.
இதனையடுத்து கடந்த 2013-ல் அவர் மீது பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட்டு அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2021-ம் ஆண்டு முதல் அலெக்சி நவால்னி சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.
இந்த நிலையில் அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்ததாக கடந்த வாரம் ரஷிய ஊடகங்களில் செய்தி வெளியானது. அவரது உயிரிழப்புக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக அலெக்சி நவால்னி கடந்த 2021-ல் டாம்ஸ்க் நகரில் இருந்து மாஸ்கோவுக்கு சென்றபோது விமானத்தில் அவர் குடித்த தேநீரில் விஷம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் ரஷிய அரசாங்கத்துக்கு தொடர்பு இருப்பதாக ஜெர்மனி குற்றம்சாட்டியது. ஆனால் இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுப்பதாக ரஷிய அரசாங்கம் தெரிவித்தது. இந்தநிலையில் அலெக்சி நவால்னி மர்மமான முறையில் சிறையில் உயிரிழந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே உக்ரைனுடனான போர் உள்ளிட்ட பிரச்சினைகளால் நாட்டு மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்து உள்ள அதிபர் புதினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் அலெக்சி நவால்னியின் உயிரழப்பு குறித்து அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசுகையில், "அலெக்சி நவால்னி மிகவும் துணிச்சல் மிக்கவர். அவர் மீண்டும் ரஷியாவுக்கு சென்றிருக்கக் கூடாது. ரஷிய மக்கள் எது நடக்கக் கூடாது என்று நினைத்தார்களோ அது நடந்துவிட்டது.
ரஷியாவில் நடப்பது தற்போது அமெரிக்காவிலும் நடக்கத் தொடங்கியுள்ளது. அலெக்சி நவால்னியைப் போல் இங்கு என்னைத்தான் இவர்கள் குறிவைக்கிறார்கள். என் மீது பழி சுமத்துகிறார்கள்" என்று தெரிவித்தார்.