< Back
உலக செய்திகள்
அலெக்சி நவால்னிக்கு மேலும் 19 ஆண்டுகள் சிறை - ரஷிய கோர்ட்டு தீர்ப்பு
உலக செய்திகள்

அலெக்சி நவால்னிக்கு மேலும் 19 ஆண்டுகள் சிறை - ரஷிய கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
5 Aug 2023 3:20 PM IST

அலெக்சி நவால்னி மீதான மற்றொரு வழக்கில் அவருக்கு மேலும் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோ,

ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. கடந்த 2020-ம் ஆண்டு இவரை கொலை செய்யும் நோக்கில் விமான நிலையத்தில் அவர் குடித்த டீயில் நோவிசோக் என்ற ரசாயன நஞ்சு கலந்து கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சதியின் பின்னணியில் அதிபர் புதினின் அரசு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக ஒன்று திரண்டன. தொடர்ந்து ரஷியாவின் மூத்த அரசு அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்க அரசு பொருளாதார தடைகளை விதித்தது.

இதனிடையே ரசாயன தாக்குதலுக்கு ஆளான நவால்னி ஜெர்மனியில் சிகிச்சை பெற்று மீண்டும் ரஷியா திரும்பியபோது விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார். பழைய பண மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த வழக்கில் அவருக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரஷிய கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இதுதவிர நவால்னி மீது மோசடி மற்றும் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகள் பதியப்பட்டு, மேலும் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து நவால்னி மாஸ்கோவின் கிழக்கே உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பயங்கரவாத செயல்களுக்கு துணை போனதாக கூறி அலெக்சி நவால்னி மீது பதியப்பட்ட மற்றொரு வழக்கில், அவருக்கு மேலும் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரஷிய கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

மேலும் செய்திகள்