விமானத்தில் இருந்து திடீரென விழுந்த ஊழியர்.. வைரலாகும் வீடியோ
|விமான நிறுவன ஊழியர் விமானத்தின் கதவை திறந்து படிக்கட்டில் கால் வைத்தபோது, படிக்கட்டு நகர்ந்ததால் நொடிப்பொழுதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
ஜகார்த்தா:
இந்தோனேசிய தலைநகர் ஜகாத்தா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
டிரான்ஸ்நுசா விமானத்தின் உள்ளே சென்று ஆய்வு செய்த விமான நிறுவன ஊழியர் ஒருவர், ஆய்வை முடித்துவிட்டு இறங்க முயன்றுள்ளார். ஆனால் அவர் உள்ளே இருப்பதை கவனிக்காத பிற ஊழியர்கள், இறங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த படிக்கட்டை அங்கிருந்து அகற்றியுள்ளனர்.
அந்த ஊழியர் விமானத்தின் கதவை திறந்து படிக்கட்டில் கால் வைத்தபோது, படிக்கட்டு நகர்ந்ததால் நொடிப்பொழுதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் புனேயின் லோஹேகான் பகுதியைச் சேர்ந்த விவின் அந்தோணி டொமினிக் என்பது தெரியவந்தது.
விமான கதவு மூடப்படுவதற்கு முன்பே ஏணியை எதற்கு ஊழியர்கள் அகற்றினார்கள் என்றும் இது முழுக்க முழுக்க அவர்களின் அலட்சியத்தை காட்டுவதாகவும், இந்த வீடியோவை பார்த்தவர்கள் விமான நிலைய நிர்வாகத்தை விமர்சனம் செய்கின்றனர்.