அமெரிக்காவில் நாடாளுமன்ற தேர்தல்: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஜோ பைடன் நடவடிக்கை
|அமெரிக்காவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் தருணத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட வாகன எரிபொருட்கள் விலையைக் குறைக்க ஜோ பைடன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் எந்தவொரு ஜனாதிபதி பதவிக்கு வந்தாலும் அவரது 4 ஆண்டு பதவிக்காலத்தின் மத்தியில் (2 ஆண்டுகளுக்குபின்) நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும். இது இடைக்கால தேர்தல் ('மிட்டேர்ம் போல்ஸ்') என அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் அங்கு ஜோ பைடன் ஜனாதிபதியாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், அவருடைய பதவிக்காலத்தில் மத்தியில், அடுத்த மாதம் 8-ந் தேதி நாடாளுமன்ற கீழ்சபையில் உள்ள (பிரதிநிதிகள் சபை) மொத்த இடங்களான 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட் சபையில் மொத்தம் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தல் வெற்றி, 2024-ம் ஆண்டு அங்கு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்தக்கட்சி ஜெயிக்கப்போகிறது என்பதற்கு சமிக்ஞையாக அமையும்.
பணவீக்கம் உயர்வு
அமெரிக்காவில் கடந்த மாத நிலவரப்படி நுகர்வோர் விலை பணவீக்கம் 8.2 சதவீதமாக உள்ளது. இதற்கு அங்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட வாகன எரிபொருட்கள் விலை உயர்வு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் சங்கிலித் தொடர்போல மற்ற விலைவாசிகளும் உயர்ந்துள்ளன. இது மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது அடுத்த மாதம் நடக்கிற நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோ பைடன் நடவடிக்கை
இந்த நிலையில் எரிபொருட்கள் விலையை குறைப்பதற்காக கையிருப்பில் இருந்து கச்சா எண்ணெயை அதிகளவில் விடுவிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.
இது தொடர்பாக அவர் நேற்று முன்தினம் ஆற்றிய உரையில் கூறியதாவது:-
உக்ரைன் மீது ரஷிய அதிபர் புதின் படையெடுத்ததால்தான் எரிபொருட்கள் விலை உயர்ந்தன. இது சர்வதேச சந்தையை உலுக்கியது. எனவே எரிபொருட்கள் விலையைக் குறைக்க என்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறேன்.
அந்த வகையில் எரிசக்தித்துறை அமெரிக்காவின் மூல உபாய கையிருப்பில் இருந்து டிசம்பர் மாதம் வரையில் மேலும் 1 கோடியே 50 லட்சம் பீப்பாய் எண்ணெயை விடுவிக்கும்.
பொறுப்புடன் எண்ணெய் உற்பத்தி
கையிருப்பில் இருந்து கச்சா எண்ணெயை விடுவிக்கிறபோது, அது எரிபொருட்கள் விலை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே நாங்கள் தேசிய சொத்தான கச்சா எண்ணெய் கையிருப்பை தொடர்ந்து பொறுப்புடன் பயன்படுத்தப்போகிறோம்.
இப்போது மூல உபாய கச்சா எண்ணெய் கையிருப்பு சுமார் பாதிக்கு மேல் நிரம்பி உள்ளது. அதாவது சுமார் 40 கோடி பீப்பாய் இருப்பு இருக்கிறது. எந்தவொரு அவசர நிலைக்கும் இது போதுமானதை விட அதிகம் ஆகும்.
தூய்மையான எரிசக்திக்கான மாற்றத்தை தாமதப்படுத்தாமல் அல்லது ஒத்தி வைக்காமல், அமெரிக்கா பொறுப்புடன் எண்ணெய் உற்பத்தியை நிறுத்தவில்லை. உற்பத்தியை தாமதப்படுத்தவில்லை.
தினசரி உற்பத்தி
நாங்கள் தினமும் 1 கோடியே 20 லட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்கிறோம். அடுத்த ஆண்டு எண்ணெய் உற்பத்தியில் சாதனை அளவை எட்டும் பாதையில் இருக்கிறோம். ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 70 அமெரிக்க டாலராக (சுமார் ரூ.5,600) வீழ்ச்சி அடையும்போது, கையிருப்பை நிரப்புவதற்காக அமெரிக்கா எண்ணெய் வாங்கும். கச்சா எண்ணெய் விவகாரத்தில் எனது முடிவில் அரசியல் உள்நோக்கம் எதுவும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.