மெக்சிகோ நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட ஏலியன் உடல்கள்..! நாசாவின் பதில் என்ன தெரியுமா?
|அவை பூமியில் உள்ள எந்த உயிரினங்களுடனும் தொடர்புடையவை அல்ல என்று ஏலியன் ஆர்வலர் ஜெய்ம் மவுசன் குறிப்பிட்டார்.
மெக்சிகோ நாடாளுமன்றத்தில் 2 மிகச்சிறிய பதப்படுத்தப்பட்ட உடல்கள் (மம்மி) சமீபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. அவை வேற்றுகிரகவாசிகளின் (ஏலியன்) உடல்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஏலியன் ஆர்வலரும், பத்திரிகையாளருமான ஜெய்ம் மவுசன் இந்த உடல்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காட்டி விளக்கினார். நீண்ட தலையுடன் கூடிய அந்த உடல்களின் ஒவ்வொரு கையிலும் மூன்று விரல்கள் இருந்தன.
பெருவின் பண்டைய நாஸ்கா கோடுகளுக்கு அருகில் இந்த உடல்கள் மீட்கப்பட்டதாகவும், மெக்சிகோவின் தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகம், கார்பன் பகுப்பாய்வு முறையில் ஆய்வு செய்து இதன் காலத்தை மதிப்பிட்டதாகவும், இந்த உடல்கள் சுமார் 1,000 ஆண்டுகள் பழமையானது என்றும் மவுசன் கூறினார். அவை பூமியில் உள்ள எந்த உயிரினங்களுடனும் தொடர்புடையவை அல்ல என்றும் குறிப்பிட்டார்.
வேற்றுகிரகவாசிகள், அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (யுஎஃப்ஓ) போன்ற ஆச்சரியமூட்டும் விசயங்கள் அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஏலியன் உடல்கள் என சொல்லப்படும் இந்த மம்மி குறித்த விவாதமும் இணைந்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் நாசா புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், யுஎஃப்ஓ-க்களைப் புரிந்துகொள்வதில் நாசா முக்கியப் பங்காற்ற வேண்டும் என ஆய்வுக் குழு அளித்த பரிந்துரையின்படி, ஆராய்ச்சி இயக்குநரை நியமிப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பின்போது, மெக்சிகோ நாடாளுமன்றத்தில் காண்பிக்கப்பட்ட உடல்கள் குறித்து நாசா அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.
ஆய்வுக்குழு தலைவர் டேவிட் ஸ்பெர்கல் கூறும்போது, "இதை நான் டுவிட்டரில் மட்டுமே பார்த்திருக்கிறேன். உங்களிடம் வழக்கத்திற்கு மாறான விஷயங்கள் இருந்தால், அது தொடர்பான தரவுகளை வெளிப்படையாக வைக்க வேண்டும். விஞ்ஞான சமூகத்திற்கு அதன் மாதிரிகள் கிடைக்கச் செய்யுங்கள்" என மெக்சிகோ அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.