ஆப்கானிஸ்தான்: அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து; 21 பேர் பலி
|ஆப்கானிஸ்தானில் சரியாக போடப்படாத சாலைகளின் நிலை மற்றும் ஓட்டுநரின் கவனக்குறைவு போன்றவற்றால், சாலை விபத்துகள் அதிகளவில் நடக்கின்றன.
காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் தென்பகுதியில் ஹெல்மண்ட் மாகாணத்தில் கெராஷ்க் மாவட்டத்தில் தெற்கு கந்தகார் மற்றும் மேற்கு ஹெராத் மாகாணங்களுக்கு இடைப்பட்ட நெடுஞ்சாலையில் இன்று காலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது.
இதுபற்றி போக்குவரத்து அதிகாரி கத்ரதுல்லா கூறும்போது, பைக் ஒன்றின் மீது பயணிகள் சென்ற பஸ் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது. இதன்பின்னர் அந்த பஸ் எதிர் திசையில் சென்ற எரிபொருள் ஏற்றி சென்ற லாரி மீது மோதியது என கூறியுள்ளார்.
விபத்தில், பைக்கில் இருந்த 2 பேர், லாரியில் இருந்த 3 பேர் மற்றும் பஸ்சில் பயணித்த 16 பேர் என மொத்தம் 21 பேர் பலியாகி உள்ளனர். 38 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பஸ்சின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து முதலில், பைக் மீது மோதி உள்ளது. தொடர்ந்து, லாரியின் மீதும் மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளது.
இதில், 11 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. ஆப்கானிஸ்தானில் சரியாக போடப்படாத சாலைகளின் நிலை மற்றும் ஓட்டுநரின் கவனக்குறைவு போன்றவற்றால், சாலை விபத்துகள் அதிகளவில் நடக்கின்றன.
கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த விபத்தில், எண்ணெய் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து, தீப்பிடித்து எரிந்ததில், 31 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.