< Back
உலக செய்திகள்
ஆப்கானிஸ்தான்: கஞ்சா செடிகளை அழிக்க சென்ற வீரர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்; 3 பேர் பலி
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான்: கஞ்சா செடிகளை அழிக்க சென்ற வீரர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்; 3 பேர் பலி

தினத்தந்தி
|
8 May 2024 9:14 PM GMT

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படை வீரர்களின் வாகனம் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலால், பெண்கள் மற்றும் குழந்தைகள் என நாங்கள் அனைவரும் பயந்து போயிருக்கிறோம் என குடிமக்கள் கூறியுள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் படாக்சான் மாகாணத்தில் பைசாபாத் நகரில் பாதுகாப்பு படையினரை ஏற்றி கொண்டு வாகனம் ஒன்று சென்றது. இந்நிலையில், திடீரென அந்த வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில், 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். இதுபற்றி தலீபான்களின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்துல் மதின் குவானி கூறும்போது, மோட்டார் சைக்கிள் ஒன்றில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. அது வெடித்ததில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கஞ்சா செடிகளை அழிப்பதற்காக அவர்கள் சென்றபோது, கண்ணிவெடிகள் வெடிக்க செய்யப்பட்டு உள்ளன என கூறியுள்ளார். இந்த பகுதியில் தலீபான்கள் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குடிமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த தாக்குதலால், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் பயந்து போயுள்ளனர். நாங்கள் கவலை அடைந்திருக்கிறோம். தலீபான்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குகிறோம். இந்த சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்கும் வகையில், அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு எந்த தனிநபரோ அல்லது குழுவோ பொறுப்பேற்கவில்லை.

மேலும் செய்திகள்