காசா போர் நிறுத்தத்திற்கு முன் அதிரடி; 300 பயங்கரவாத இலக்குகள் தாக்கி அழிப்பு
|காசா முனையின் வடக்கு பகுதியில் நடந்து வரும் போரின்போது, விமானம் மற்றும் பீரங்கிகள் ஆகியவற்றை கொண்டு பல்வேறு இடங்கள் தாக்கப்பட்டன.
டெல் அவிவ்,
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான மோதல் 45 நாட்களை கடந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், இரு தரப்பினரும் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்த முன்வந்தனர். இதுபற்றி இஸ்ரேல் நீதி அமைச்சகம் அதன் வலைதளத்தில் பாலஸ்தீனிய கைதிகளின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அரசு உத்தரவின்பேரில், கைதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஒப்பந்தத்தின்படி அவர்கள் விடுவிக்கப்பட கூடும்.
இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டு உள்ள 150 பாலஸ்தீனியர்களை விடுவிப்பதற்கு ஈடாக, 50 பணய கைதிகளை விடுவிப்பது என இஸ்ரேல் அரசும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பும் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொண்டன. இதன்படி, கடத்தப்பட்ட பணய கைதிகள் 240 பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 50 பேர் 4 நாட்களில் அடுத்தடுத்து விடுவிக்கப்படுவார்கள்.
பட்டியல் வெளியிடப்படும் நேரத்தில், இந்த தகவல் சரியானது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த நிலையில், அமைச்சகத்தின் பட்டியலின்படி 300 கைதிகளின் விவரங்கள் உள்ளன. இது, முதலில் வெளியான 150 பேர் என்ற எண்ணிக்கையை விட இரட்டிப்பாகும். போர் நிறுத்தம் 4 நாட்களுக்கு அமலில் இருக்கும். அப்போது கைதிகள் விடுவிப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
எனினும், அதற்கான கால அளவு தொடங்குவதற்கு முன் இஸ்ரேல் படையினர் காசாவில் இலக்குகளை தாக்கி அழித்தனர். தலைமையகங்கள், சுரங்கங்கள், சக்தி வாய்ந்த வெடிகுண்டு கிடங்குகள், சக்தி வாய்ந்த வெடிகுண்டு உற்பத்தி தளங்கள் மற்றும் பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுதளங்கள் மற்றும் எங்களுடைய படைகளுக்கு ஆபத்து ஏற்படுத்த கூடிய கண்காணிப்பு முகாம்கள் உள்ளிட்டவை தாக்கி அழிக்கப்பட்டன.
24 மணி நேரத்தில் 300 இலக்குகளை வான்வழியே சென்று தாக்குதல் நடத்தி அழித்தனர். இஸ்ரேல் பாதுகாப்பு படைகளை நோக்கி ராணுவ ஆயுதத்துடன் சென்ற பயங்கரவாதிகளை ஜபலியா பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தினர். காசா முனையின் வடக்கு பகுதியில் நடந்து வரும் போரின்போது, விமானம் மற்றும் பீரங்கிகள் ஆகியவற்றை கொண்டு பல்வேறு இடங்கள் தாக்கப்பட்டன.
மசூதி ஒன்றிற்குள் இருந்த சுரங்க நுழைவு பகுதியை கண்டறிந்து, ராணுவ போர் குழுவினர் தாக்குதல் நடத்தி அழித்தனர். இதேபோன்று, குடிமகனின் வீடு இருந்த பகுதியில் காணப்பட்ட சுரங்க நுழைவாயில் மற்றும் பல்வேறு ஆயுதங்களையும் கண்டறிந்து, ராணுவ வீரர்கள் அவற்றை அழித்தனர்.
சமீபத்தில் 2 நாட்களுக்கு முன், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், காசா முனையில் 250 பயங்கரவாத இலக்குகளை தாக்கி அழித்துள்ளனர் என தகவல் வெளியானது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் பல்வேறு இலக்குகளை 24 மணிநேரத்தில் அவர்கள் தாக்கி அழித்தனர்.
இதன் ஒரு பகுதியாக, பயங்கரவாதிகள், ராக்கெட் ஏவுகலன்கள் மற்றும் பல்வேறு பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு தாக்குதல்கள் நடந்தன. இதேபோன்று, காசா பிரிவில், ஹெலிகாப்டர் ஒன்று, ராக்கெட் ஏவுதளத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இதன்பின், கிரேட்டர் டெல் அவிவ் பகுதிக்கு உட்பட்ட கஷ் டான் என்ற இடத்தில் ராக்கெட்டுகள் அடுத்தடுத்து தாக்குதலை நடத்தின.