பாகிஸ்தானில் உறவு வைத்துக்கொள்ள மறுத்த திருநங்கை மீது ஆசிட் வீச்சு..!
|பாகிஸ்தானில் உறவு வைத்துக்கொள்ள மறுத்த திருநங்கை மீது ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாகூர்,
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் லாகூரில் உறவு வைத்துக்கொள்ள மறுத்த திருநங்கை மீது ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கின்சா (வயது 23) என்ற திருநங்கை நேற்று ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஆட்டோவிற்காக காத்திருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த ஹம்சா சலீம் என்ற நபர் கின்சா மீது ஆசிட் வீசி அங்கிருந்து தப்பிச் சென்றார். முகம் மற்றும் கைகளில் தீக்காயங்களுடன், சர்வீசஸ் மருத்துவமனையில் கின்சா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கின்சாவின் தோழி ஹினா, மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கின்சவுடன் உறவை வளர்த்துக் கொள்ள ஹம்சா விரும்பியதாகவும் அதற்கு கின்சா மறுப்பு தெரிவித்ததால் ஹம்சா அவர் மீது ஆசிட் வீசியதாகவும் தெரிவித்தார். மேலும் திருநங்கைகளை துன்புறுத்தும் கும்பலுக்கு ஹம்சா தலைவனாக இருப்பதாகவும், கின்சாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பஞ்சாப் முதல்வரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
ஆசிட் தாக்குதல் நடத்திய ஹம்சாவையும் மேலும் 3 கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர். மருத்துவமனையில் கின்சாவை நேரில் சந்தித்த உள்துறை மந்திரி அதாவுல்லா தாரார், குற்றவாளியை கைது செய்த போலீசாரை பாராட்டினார்.
திருநங்கைகளின் பிரச்சினைகள் தொடர்பான சமீபத்திய ஆய்வு ஒன்றில், 77 சதவீதம் பேர் உடல்ரீதியான தாக்குதல்களை அனுபவிக்கிறார்கள் என்றும் அன்றாட வாழ்க்கையில் பாரபட்சமான நடத்தையை எதிர்கொள்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் இது போன்ற நடவடிக்கைகள் திருநங்கைகளை பிச்சை எடுக்க, போதைப்பொருள் பயன்படுத்த, தற்கொலை செய்ய, பாலியல் தொழிலாளிகளாக கட்டாயப்படுத்துகிறது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில், ஆசிட் வீச்சால் ஒரு திருநங்கை உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.