அமெரிக்க விமான நிலையத்தில் கோர சம்பவம்; விமான என்ஜினில் சிக்கி ஊழியர் உயிரிழப்பு
|விமான நிலைய ஊழியர் விமானத்தின் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டு உடல் நசுங்கி உயிரிழந்தார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் அலபாமா மாகாணம் மாண்ட்கோமெரி நகரில் உள்ள விமான நிலையத்துக்கு டல்லாஸ் நகரில் இருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர், விமானங்கள் நிறுத்தும் இடத்தில் விமானம் நிறுத்தப்பட்டது.
ஆனால் அதன் பின்னரும் விமானத்தின் ஒரு என்ஜின் மட்டும் தொடர்ந்து இயங்கி கொண்டிருந்தது. இதனை அறியாத விமான நிலைய ஊழியர் ஒருவர் அந்த விமானத்துக்கு அருகே சென்றார். அப்போது அவர் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டு சிக்கி கொண்டார். இதனால் கண் இமைக்கும் நேரத்தில் உடல் நசுங்கி அவர் பலியானார்.
இந்த கோர சம்பவத்தால் அலபாமா விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த விபத்து குறித்து அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.