நைஜீரியாவில் சுமார் 300 பள்ளி மாணவர்கள் கடத்தல் - ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை
|மாணவர்களை காப்பாற்ற முயன்ற ஒரு நபரை கடத்தல்காரர்கள் சுட்டுக் கொன்றதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அபுஜா,
நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கடுனா மாகாணத்தில் குரிகா என்ற பகுதியில் உள்ள பள்ளியில் இருந்து 287 மாணவர்கள் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 8 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களை ஆயுதம் ஏந்திய கும்பல் இருசக்கர வாகனங்களில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த கடத்தல் சம்பவத்தின்போது மாணவர்களை காப்பாற்ற முயன்ற ஒரு நபரை கடத்தல்காரர்கள் சுட்டுக் கொன்றதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடத்தல்காரர்கள் மாணவர்களை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படும் நிலையில், மாணவர்களை தேடும் பணியில் நைஜீரிய ராணுவத்தினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் ஆயுதம் ஏந்திய குழுக்களால் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இதற்கு முன் அங்கு கடந்த 2021-ம் ஆண்டு இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் நடந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கடத்தல் சம்பவங்கள் சற்று குறைந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மீண்டும் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.