< Back
உலக செய்திகள்
பாலஸ்தீனத்திற்கு ஆதரவு: இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் உயிரிழப்பு
உலக செய்திகள்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு: இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
27 Feb 2024 4:09 AM IST

பாலஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டுமென கோரி இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் உயிரிழந்தார்.

வாஷிங்டன்,

இஸ்ரேல் மீது காசாவில் செயல்பட்டுவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலியர்கள் 253 பேரை காசாமுனைக்கு பணய கைதிகளாக கடத்தி சென்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.

இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனாலும், இன்னும் 134 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.

அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழுவின் தாக்குதலுக்கு பதிலடியாக காசாமுனை மீது போர் அறிவித்துள்ள இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திவரும் இந்த தாக்குதலில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 29 ஆயிரத்து 782 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, காசா முனை மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை உடனடியாக நிறுத்தவேண்டுமென பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஐரோப்பிய நாடுகளிலும் இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இஸ்ரேல் தூதரகம் முன் அமெரிக்க விமானப்படை வீரர் அரோன் புஷ்னெல் (வயது 25) போராட்டத்தில் ஈடுபட்டார். பாலஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டும், இனப்படுகொலைக்கு துணைபோகமாட்டேன் என்று கோஷம் எழுப்பிய அவர் இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்தார். அதை சமூகவலைதளத்தில் அரோன் நேரடியாகவும் ஒளிபரப்பு செய்தார்.

தீக்குளிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த அரோன் புஷ்னெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விமானப்படை வீரர் அரோன் புஷ்னெல் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்