< Back
உலக செய்திகள்
1,600 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து ஆயிரக்கணக்கான குழந்தைகளின் பசியை போக்கிய பெண்
உலக செய்திகள்

1,600 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து ஆயிரக்கணக்கான குழந்தைகளின் பசியை போக்கிய பெண்

தினத்தந்தி
|
17 July 2023 6:00 PM IST

அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் என்ற பெண் உருவம் தனது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாய்ப்பால் இல்லாத பல குழந்தைகளுக்கும் தாய்ப்பால் தானம் செய்து உள்ளார்.

வாஷிங்டன்

தாய்ப்பால் அமிர்தம்..அற்புதம்..ஆரோக்கியம்..அதனால்தான் குழந்தை பிறந்தவுடனே தாய்ப்பால் கொடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சில தாய்மார்கள் சில காரணங்களால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் வாய்ப்பை இழக்கின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் என்ற பெண் தனது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாய்ப்பால் இல்லாத பல குழந்தைகளுக்கும் தாய்ப்பால் தானம் செய்து உள்ளார். அவரது தியாகத்தை கின்னஸ் உலக சாதனை அமைப்பாளர்கள் பாராட்டி உள்ளனர்.

அமெரிக்காவின் ஓரிகான் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் ஆண்டர்சன் சியாரா. ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டவர்ஒவ்வொரு ஒன்பது நிமிடங்களுக்கும் பால் உற்பத்தி செய்கிறார். அவரின் இந்தக் குறைபாடு எத்தனையோ குழந்தைகளின் பசியைப் போக்கியிருக்கிறது.

அவரது உடல், நாளொன்றுக்கு சுமார் 6.65 லிட்டர் தாய்ப்பாலை உற்பத்தி செய்கிறது. இது சராசரி தாய்க்கு சுரக்கும் தாய்ப்பால் சுரப்பை விட கிட்டத்தட்ட 8 முதல் 10 மடங்கு அதிகமாகும்.

2014-ம் ஆண்டில், ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் நோய் இருப்பது கண்டறியப்பட்டபோது, அவரது மார்பகத்தில் இருந்து, யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு தாய்ப்பால் சுரப்பு இருந்தது. அந்த நிலையில், தாய்ப்பால் வீணாகப் போவதை விரும்பாத எலிசபெத், பிற தாய்மார்களுக்கு உதவ முடிவு செய்தார்.

2 குழந்தைகளின் தாயான இவர் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஊட்டமளித்துள்ளார். குறிப்பாக குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றவும் உதவுகிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந் தேதி முதல் 2018-ம் ஆண்டு ஜூன் 20-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1,599.68 லிட்டர் ஒரு பால் வங்கிக்கு நன்கொடையாக அளித்ததன் மூலம், எலிசபெத் ஆண்டர்சன் சியாரா கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

உண்மையில், இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்