< Back
உலக செய்திகள்
பூட்டான் மக்களின் இனிமையான வரவேற்பு - பிரதமர் மோடி நெகிழ்ச்சி
உலக செய்திகள்

'பூட்டான் மக்களின் இனிமையான வரவேற்பு' - பிரதமர் மோடி நெகிழ்ச்சி

தினத்தந்தி
|
22 March 2024 4:10 PM IST

இந்தியா-பூட்டான் இடையிலான நட்புறவு புதிய உயரங்களை எட்டட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

திம்பு,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூட்டானுக்கு பிரதமர் மோடி 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பூட்டானில் உள்ள பாரோ சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை பிரதமர் மோடி சென்றடைந்தார். அவரை பூட்டான் பிரதமர் செரிங் டோபே நேரில் சென்று வரவேற்றார்.

தொடர்ந்து பாரோ விமான நிலையத்தில் இருந்து பூட்டானின் தலைநகர் திம்புவுக்கு சாலை மார்க்கமாக பிரதமர் மோடி பயணித்தார். அப்போது வழிநெடுகிலும் இந்தியா மற்றும் பூட்டானின் தேசிய கொடிகளை ஏந்தி நின்றபடி அந்நாட்டு மக்கள் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி எழுதிய 'கர்பா' பாடலுக்கு பாரம்பரிய உடை அணிந்த நடனக் கலைஞர்கள் நடனமாடினர். அந்த நடனத்தை ரசித்துப் பார்த்த பிரதமர் மோடி, நடனக் கலைஞர்களை வெகுவாக பாராட்டினார்.

இந்நிலையில் பூட்டானில் தனக்கு கிடைத்த வரவேற்பு குறித்து பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "அழகான பூட்டான் நாட்டிற்கு வந்துள்ள எனக்கு இனிமையான வரவேற்பை அளித்த பூட்டான் மக்கள், குறிப்பாக குழந்தைகளுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை அன்புடன் வரவேற்ற பூட்டான் பிரதமர் செரிங் டோபேவுக்கு நன்றி. இந்தியா-பூட்டான் நட்புறவு புதிய உயரங்களை எட்டட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல் பூட்டான் பிரதமர் செரிங் டோபே தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பூட்டானுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் மூத்த சகோதரரே" என்று இந்தியில் பதிவிட்டுள்ளார். தனது பயணத்தின்போது பிரதமர் மோடி பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கேல் வாங்சுக்கை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து டாசிச்சோ சாங் பகுதியில் உள்ள பாரம்பரிய புத்த மடாலயத்திற்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். இதையடுத்து திம்புவில் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்ட அதிநவீன மருத்துவமனையான ஜியால்ட்சுன் ஜெட்சன் பெமா தாய்-சேய் மருத்துவமனையையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.



மேலும் செய்திகள்