ரஷியாவுக்குள் புகுந்து டிரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்... பற்றி எரியும் எண்ணெய் சேமிப்பு கிடங்கு
|உக்ரைன் டிரோன்கள் மாஸ்கோவிற்கு தெற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கன் பவுடர் ஆலையையும் தாக்கியதாக செய்தி வெளியாகி உள்ளது.
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா முழு அளவிலான ராணுவ நடவடிக்கையை தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. எனினும் போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
ஆரம்பத்தில் ரஷிய படைகளின் தாக்குதலை சமாளித்து தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட உக்ரைன் படைகள், பின்னர் எதிர்தாக்குதலை தீவிரப்படுத்தின. சமீப காலமாக ரஷியாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துகின்றன. இந்த ஆண்டு ரஷிய எல்லைப் பகுதிகளுக்குள் அதிக இலக்குகளைத் தாக்கப்போவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.
அதனை உறுதி செய்யும் வகையில், மேற்கு ரஷியாவில் எண்ணெய் சேமிப்பு கிடங்கை குறிவைத்து உக்ரைன் படை இன்று டிரோன் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதல் காரணமாக எண்ணெய் சேமிப்பு கிடங்கு பற்றி எரிகிறது.
உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளின்ட்சி நகரில் இந்த எண்ணெய் சேமிப்பு கிடங்கு உள்ளது. டிரோன் தாக்குதலில் 6,000 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட 4 ராட்சத டேங்குகளில் உள்ள எரிபொருள் தீப்பிடித்து எரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கிளின்ட்சியில் பறந்து வந்த உக்ரைனின் டிரோனை, ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்க செய்து வீழ்த்தியதாகவும், ஆனால் அதற்குள் டிரோனில் இருந்து வெடிகுண்டு வெளியேறி எண்ணெய் சேமிப்பு கிடங்கில் விழுந்து வெடித்ததாகவும் பிரையன்ஸ்க் பிராந்திய ஆளுநர் கூறியுள்ளார். இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேபோல் உக்ரைன் டிரோன்கள் மாஸ்கோவிற்கு தெற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தம்போவின் கன் பவுடர் ஆலையையும் தாக்கியதாக உக்ரைன் தேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த தாக்குதலில் ஆலைக்கு பாதிப்பு இல்லை என்றும், ஆலை வழக்கம்போல் செயல்படுவதாகவும் தம்போவ் ஆளுநர் கூறியுள்ளார்.
தற்போது ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த சூழலில், உக்ரைன் படைகள் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய டிரோன்கள் மூலம், ரஷியாவிற்குள் உள்ள தொலைதூர இலக்குகளை குறிவைக்கின்றன.