சத் நாட்டில் ராணுவ வெடிபொருள் கிடங்கில் திடீர் வெடிவிபத்து; 9 பேர் பலி
|சத் நாட்டில் உள்ள ராணுவ வெடிபொருள் கிடங்கில் நேற்றிரவு வெடிவிபத்து ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர். 46 பேர் படுகாயமடைந்தனர்.
ஜமீனா,
சத் நாட்டின் தலைநகர் ஜமீனாவில் கவுடுஜி மாவட்டத்தில் ராணுவ வெடிபொருள் கிடங்கு ஒன்று உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு திடீரென இந்த கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்டது. 38 நிமிடங்களுக்கும் கூடுதலாக வெடிபொருட்கள் வெடித்ததில், அருகேயிருந்த கட்டிடங்கள் குலுங்கின.
கிடங்கில் இருந்து வெடிபொருட்கள் வெளியே தூக்கி எறியப்பட்டன. வெடிவிபத்து ஏற்பட்டதில், கரும்புகை வான் வரை பரவியது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 46 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. எனினும், பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் உதவியுடன் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு அதிபர் மகமத் டெபி இத்னோ பேஸ்புக் வழியே இரங்கல் தெரிவித்து உள்ளார். 1.8 கோடி மக்கள் வசிக்க கூடிய சத் நாட்டில் அரசியல் குழப்ப நிலை நீடித்து வருகிறது. ராணுவ ஆட்சியின்போது, இடைக்கால அதிபராக டெபி இத்னோ வழிநடத்தி சென்றார். இதன்பின் சர்ச்சைக்குரிய வகையிலான அதிபர் தேர்தலில், டெபி வெற்றி பெற்றார். உள்நாட்டு அரசியல் குழப்பம் மற்றும் அண்டை நாடான சூடானுடன் ஏற்பட்டுள்ள போர் உள்ளிட்ட பதற்றங்களால் சத் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.