< Back
உலக செய்திகள்
ஒரு வலிமையான அமெரிக்கா உலகின் ஏ.டி.எம். மையம் ஆக இருக்காது: நிக்கி ஹாலே
உலக செய்திகள்

ஒரு வலிமையான அமெரிக்கா உலகின் ஏ.டி.எம். மையம் ஆக இருக்காது: நிக்கி ஹாலே

தினத்தந்தி
|
1 March 2023 5:37 PM IST

2022-ம் ஆண்டில் மட்டுமே பாகிஸ்தான், ஈராக் மற்றும் ஜிம்பாப்வே நாடுகளுக்கு கோடிக்கணக்கான நிதி உதவியை அமெரிக்கா வழங்கி உள்ளது என நிக்கி ஹாலே கூறியுள்ளார்.

வாஷிங்டன்,


அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடுவேன் என சமீபத்தில், முன்னாள் மாகாண கவர்னர் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான நிக்கி ஹாலே (வயது 51) விருப்பம் வெளியிட்டார்.

அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 76) முன்பே விருப்பம் தெரிவித்து விட்டார். இந்த நிலையில் அதே கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகியான நிக்கி ஹாலே டிரம்புக்கு போட்டியாக தானும், 2024 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளருக்கான போட்டியில் களமிறங்குவேன் என கூறியது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஹாலே வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஒரு பலவீனம் வாய்ந்த அமெரிக்கா மோசம் வாய்ந்த நாடுகளுக்கு பணம் வழங்கி கொண்டிருக்கிறது. கடந்த 2022-ம் ஆண்டில் மட்டுமே பாகிஸ்தான், ஈராக் மற்றும் ஜிம்பாப்வே நாடுகளுக்கு கோடிக்கணக்கான நிதியை உதவியாக வழங்கி உள்ளது என நிக்கி ஹாலே தெரிவித்து உள்ளார்.

ஒரு வலிமையான அமெரிக்கா உலகின் ஏ.டி.எம். மையம் ஆக இருக்காது என்றும் ஹாலே கூறியுள்ளார். சமீபத்தில் நியூயார்க் போஸ்ட் பத்திரிகைக்கு நிக்கி ஹாலே அளித்த செய்தியில், ஆட்சி அதிகாரத்திற்கு நாங்கள் வந்தால், அமெரிக்காவை வெறுக்க கூடிய நாடுகளுக்கு, வெளிநாட்டு நிதியுதவியாக வழங்க கூடிய ஒவ்வொரு சென்ட் தொகையையும் தடுத்து நிறுத்துவேன்.

ஒரு வலிமையான அமெரிக்கா, அதுபோன்ற மோசம் வாய்ந்தவர்களுக்கு செலவு செய்யாது. எங்களுடைய மக்கள் கஷ்டப்பட்டு ஈட்டும் வருவாயை, ஒரு பெருமைமிக்க அமெரிக்கா அதுபோன்ற நபர்களுக்கு வீணாக செலவிடாது.

நம்முடைய எதிரிகளிடம் இருந்து தள்ளியே இருக்கும் மற்றும் நமது நண்பர்களுடன் துணையாக நிற்பவர்களே, நமது நம்பிக்கையை பெற தகுதியான ஒரே தலைவர்கள் ஆவர் என அவர் தெரிவித்து உள்ளார்.

இதன்படி ரூ.3.79 லட்சம் கோடி தொகை அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளுக்கு நிதியுதவியாக போய் சேர்ந்து உள்ளது. நமது வரிசெலுத்தும் மக்கள், அவர்கள் ஈட்டும் தொகை எந்த நாட்டுக்கு போய் சேர்கிறது என்பது பற்றி அறிய தகுதியானவர்கள். அவர்கள், இதுபோன்ற அமெரிக்க வெறுப்பு நாடுகள் மற்றும் அவர்களது பயன்களுக்காக போய் சேர்ந்துள்ளது என தெரிய வந்தால் அதிர்ச்சி அடைவார்கள் என்றும் ஹாலே குறிப்பிட்டு உள்ளார்.



மேலும் செய்திகள்