சீனா சென்ற அமெரிக்க வெளியுறவு மந்திரி: இரு தரப்பு உறவில் மாற்றம் வருமா?
|அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், சீனா சென்றார். இதனால் இரு தரப்பு உறவில் மாற்றம் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பீஜிங்,
அமெரிக்கா, சீனா என்னும் இரு பெரும் பொருளாதார வல்லரசு நாடுகள் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
தைவான் மீதான சீனாவின் ஆதிக்கம், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் மனித உரிமைகள் மீறல், தென் சீன கடல் பகுதியில் சீன ராணுவ ஆதிக்கம், உக்ரைன் போரில் சீனாவின் ரஷிய ஆதரவு நிலை என பல்வேறு பிரச்சினைகளில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது.
இன்னொரு புறம் இரு தரப்பு வர்த்தக மோதலும் இருக்கிறது.
சீனா சென்றார் அமெரிக்க மந்திரி
இவற்றுக்கு மத்தியில் அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் சீன தலைநகர் பீஜிங் போய்ச்சேர்ந்தார்.
ஆண்டனி பிளிங்கனின் இந்த சீன பயணம் கடந்த பிப்ரவரி மாதமே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டியது ஆகும். ஆனால் அந்த நேரத்தில் சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதால் அந்த பயணம் தடைப்பட்டது.
உறவில் மாற்றம்
அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியான பின்னர், அந்த நாட்டில் இருந்து உயர்ந்த அந்தஸ்தில் உள்ள ஒரு தலைவர் சீனா சென்றிருப்பது இதுவே முதல் முறை, அது மட்டுமின்றி 5 ஆண்டுகளில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஒருவர் சீனா சென்றிருப்பதுவும் இதுவே முதல் முறை.
எனவே அமெரிக்க வெளியறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனின் இந்த சீன பயணம், உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இரு நாடுகள் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வந்து, சுமுகமான உறவுக்கு வழிநடத்துமா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.
ஜின்பிங்குடன் சந்திப்பு
இந்த நிலையில், பீஜிங் போய்ச் சேர்ந்த சிறிது நேரத்தில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், சீன வெளியுறவு மந்திரி கின் காங்கை பீஜிங்கில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவுகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.சீன அதிபர் ஜின்பிங்கை ஆண்டனி பிளிங்கன் இன்று (திங்கட்கிழமை) சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பீஜிங் புறப்படுவதற்கு முன்பாக ஆண்டனி பிளிங்கன் வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசும்போது, அமெரிக்காவும், சீனாவும் தகவல் தொடர்பினை ஏற்படுத்தி, அதை சிறப்பாக பராமரிக்க வே்ணடியதின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். அப்போது அவர், "தவிர்க்கக்கூடிய தவறான புரிதல்களால், சீனாவுடன் நாம் கொண்டிருக்கும் போட்டி மோதலாக மாறாது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்" என குறிப்பிட்டார்.
இதே போன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசும்போது, "அடுத்த சில மாதங்களில நான் சீன அதிபர் ஜின்பிங்கை சந்திப்பேன். இருதரப்பிலும் சட்டப்பூர்வமாக உள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து பேசுவேன்" என குறிபிட்டார்.
இருநாடுகளும் ஒத்துழைக்க முடியும்
அதற்கு முன்பாக சீன அதிபர் ஜின்பிங்குடன் ஆண்டனி பிளிங்கன் இன்று நடத்துகிற பேச்சுவார்த்தை இருதரப்பு உறவுக்கு புதிய அஸ்திவாரத்தை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை தன்னைச்சந்தித்தபோது சீன அதிபர் ஜின்பிங், இரு தரப்பு உறவில் நிலவுகிற பதற்றத்தை குறைப்பதற்கான விருப்பத்தை சூசகமாக வெளிப்படுத்தி உள்ளார். இதுபற்றி அவர் பில் கேட்சிடம் குறிப்பிடுகையில், "இரு நாடுகளும் பலன் அடைகிற வகையில் அமெரிக்காவும், சீனாவும் ஒத்துழைக்க முடியும். நடப்பு உலகளாவிய சூழலில், இரு நாடுகளும் பலன் அடைகிற பல்வேறு காரியங்களை நாம் செய்யலாம். இதனால் இரு தரப்பு நாடுகளும், மக்களும், ஏன் ஒட்டுமொத்த உலகமே கூட பலன்பெற முடியும்" என தெரிவித்தது முக்கியத்துவம் பெறுகிறது.