அமெரிக்காவை தொடர்ந்து கனடா வான் பரப்பில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது
|அமெரிக்காவை தொடர்ந்து கனடா வான் பரப்பில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.
ஒட்டாவா,
வெள்ளை நிற ராட்சத பலூன்
அமெரிக்காவில் கனடா நாட்டின் எல்லையொட்டி அமைந்துள்ள மொன்டானா மாகாணத்தின் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த வெள்ளை நிற ராட்சத பலூன் கடந்த 4-ந் தேதி போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அந்த பலூன் சீனா அனுப்பிய உளவு பலூன் என்றும், பல ஆண்டுகளாக இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் சீனா பலூன் மூலம் உளவு பார்த்ததாகவும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் குற்றம் சாட்டியது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த சீனா, அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்பட்டது, உளவு பலூன் அல்ல என்றும், வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்ட பலூன் வழித்தவறி அமெரிக்காவுக்குள் சென்றுவிட்டதாகவும் கூறியது.
அமெரிக்காவில் பறந்த மர்ம பொருள்
எனினும் சீனாவின் இந்த கூற்றை ஏற்க மறுக்கும் அமெரிக்கா, நிச்சயமாக அது உளவு பலூன்தான் என்றும், இதன் பின்னணியில் சீன அரசு மற்றும் அதன் ராணுவம் இருப்பதாகவும் கூறி வருகிறது.
இதனிடையே உளவு பலூன் சர்ச்சை அடங்குவதற்குள் கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 40,000 அடி உயரத்தில் மர்ம பொருள் ஒன்று பறப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின்படி வெள்ளிக்கிழமை அந்த மர்ம பொருளை அமெரிக்கா போர் விமானம் ஏவுகணையை வீசி வீழ்த்தியது.
கனடா வான்பரப்பில் மர்ம பொருள்
இந்த நிலையில் அமெரிக்காவை தொடர்ந்து, அதன் அண்டை நாடான கனடாவின் வான்பரப்பில் மர்ம பொருள் ஒன்று பறப்பது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது. நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள யூகோன் பிராந்தியத்தின் வான்வெளியில் பல ஆயிரம் அடி உயரத்தில் அந்த மர்ம பொருள் பறந்து கொண்டிருப்பதை கனடா ராணுவம் உறுதி செய்தது.
அதனை தொடர்ந்து அந்த மர்ம பொருளை உடனடியாக சுட்டு வீழ்த்த அந்த நாட்டின் அதிபர் ஜஸ்டீன் ட்ரூடோ உத்தரவிட்டார். அதன்படி அமெரிக்கா-கனடாவின் வான்வெளியை பாதுகாக்கும் இருநாட்டு கூட்டுப்படைகளின் கீழ் இயங்கும் அமெரிக்காவின் எப்-22 ரக போர் விமானம் அந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியது.
ஜோ பைடனுடன் ஆலோசனை
முன்னதாக அமெரிக்க வான் பரப்பில் பறந்த சீன உளவு பலூன் மற்றும் மர்ம பொருளை இதே விமானம்தான் சுட்டு வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கனடாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த மர்ம பொருள் என்ன என்பதை அடையாளம் காண ராணுவ வீரர்கள் அதன் சிதைவுகளை கைப்பற்றி ஆராய்ந்து வருவதாக ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் குறித்து உடனடியாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியதாகவும் அவர் கூறினார்.