அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆந்திராவைச் சேர்ந்தவர் பலி
|அமெரிக்காவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆந்திராவைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் கடந்த 21-ந்தேதி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் ஒரு இந்தியர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த இந்தியரின் பெயர் தசாரி கோபிகிருஷ்ணா(32) என்பதும், அவர் ஆந்திர பிரதேச மாநிலம் பபாட்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
கோபிகிருஷ்ணாவுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்ற கோபிகிருஷ்ணா, அர்கான்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்டைஸ் பகுதியில் ஒரு பல்பொருள் அங்காடியில் வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 21-ந்தேதி கடைக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கோபிகிருஷ்ணா படுகாயமடைந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கடையில் இருந்து சில பொருட்களை திருடிச் சென்றது அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இதனிடையே படுகாயமடைந்த கோபிகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆந்திராவில் உள்ள கோபிகிருஷ்ணாவின் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.