< Back
உலக செய்திகள்
கர்ப்பிணி பெண்ணை கடத்தி கொலை செய்து வயிற்றில் இருக்கும் குழந்தையை திருடிய கணவன் மனைவி
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணை கடத்தி கொலை செய்து வயிற்றில் இருக்கும் குழந்தையை திருடிய கணவன் மனைவி

தினத்தந்தி
|
7 Dec 2022 4:17 PM IST

மெக்சிகோவில் கர்ப்பிணியை கடத்தி, கொன்று வயிற்றில் இருந்த குழந்தையை திருடிய தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.


மெக்சிகோ சிட்டி,


மெக்சிகோ நாட்டில் வெராகுரூஸ் நகரில் மெடலின் டெல் பிரேவோ என்ற பகுதியில் பெண்ணின் சடலம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதனை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளன. கர்ப்பிணியான 20 வயதுடைய அந்த பெண், ரோசா ஐசலா கேஸ்டிரோ வஸ்கிஸ் என போலீசாரால் அடையாளம் காணப்பட்டு உள்ளார்.

அவரை கணவன் மற்றும் மனைவி என இருவர் சேர்ந்து திட்டமிட்டு படுகொலை செய்தது தெரிய வந்துள்ளது. 8 மாத கர்ப்பிணியான ரோசா ஐசலாவை சமூக ஊடகம் வழியே குற்றவாளிகளான கொன்சாலோ மற்றும் வெரோனிகா என்ற அந்த தம்பதி தொடர்பு கொண்டுள்ளது.

இதில், ரோசாவுக்கு பிறக்க போகும் குழந்தைக்கு தேவையான ஆடைகளை நாங்கள் தருகிறோம் என அவர்கள் கூறியுள்ளனர். இதனை நம்பி, அவர்களை சந்திக்க விமான நிலையம் அருகே உள்ள பகுதிக்கு ரோசா சென்றுள்ளார்.

அந்த தம்பதியில், சந்தேகத்திற்குரிய பெண்ணுக்கு குழந்தை பெற்றெடுக்க முடியாத சூழலில், குழந்தையை திருடி செல்லும் திட்டத்தில் அவர்கள் இருந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

இதன்படி, கடைசியாக அந்த பெண்ணை ரோசா சந்திக்கிறார். அந்த காட்சிகள் சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளன. அப்போது, ரோசாவிடம் பேசும் அந்த பெண் சற்று படபடப்புடன் காணப்படுகிறார். பின்பு, ஒரு வாகனத்தில் ஏறி, பெண்ணுடன் ரோசா செல்கிறார். அதன்பின்னர் அவரை உயிருடன் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில், அந்த தம்பதியிடம் புதிதாக பிறந்த குழந்தை ஒன்று திடீரென வந்தது சந்தேகம் கிளப்பியது என போலீசார் கூறுகின்றனர். அவர்கள் பெண்ணை கடத்தி, படுகொலை செய்துள்ளனர் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதன்பின் வயிற்றில் இருந்த குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். இதில், ரோசா உயிரிழந்து விட்டார்.

இந்த கொலை வழக்கில் தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர் என வெராகுரூஸ் நகரின் அரசு வழக்கறிஞர் உறுதிப்படுத்தி உள்ளார். தம்பதியிடம் இருந்து பெண் குழந்தை கைப்பற்றப்பட்டு உள்ளது. அது நல்ல நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில், டெய்லர் பார்க்கர் என்ற 29 வயது இளம்பெண் ஒருவர் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கர்ப்பிணியான தனது தோழியின் வயிற்றை, கிழித்து அதில் இருந்த சிசுவை வெளியே எடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தில், பார்க்கரின் தோழி உயிரிழந்து விட்டார். இந்த வழக்கில் பார்க்கருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்