பயிர் கழிவுகளை எரிக்க வைத்த தீ குடியிருப்புகளுக்கும் பரவியது - 11 பேர் பலி
|பயிர் கழிவுகளை எரிக்க விவசாயிகள் தீ வைத்துள்ளனர்.
அங்காரா,
துருக்கி நாட்டின் மர்டின் மற்றும் டியர்பகீர் மாகாணங்களுக்கு இடையே ஏக்கர் கணக்கில் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்திற்கு அருகே பல்வேறு கிராமங்கள் உள்ளன.
இதனிடையே, விவசாய நிலத்தில் அறுவடைக்குப்பின் பயிர் கழிவுகளுக்கு விவசாயிகள் நேற்று இரவு தீ வைத்துள்ளனர். ஆனால், காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ மளமளவென அருகில் இருந்த கிராமங்களில் உள்ள குடியிருப்புகளுக்கும் பரவியது.
இரவு நேரம் என்பதால் அனைவரும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். இதனால், குடியிருப்புகளுக்கு தீ பரவியது குறித்து தெரியவில்லை. தீ மளமளவென குடியிருப்புகளுக்கும் பரவியதில் பலர் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், பற்றி எரிந்த தீயை பல மணிநேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.