சீனாவில் போராட்ட செய்தியை படம் பிடித்த பிரபல தனியார் சேனல் நிருபருக்கு அடி, உதை
|சீன போராட்டத்தில் நிருபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விடாமல் தடுக்கவே அவரை கைது செய்தோம் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
லண்டன்,
சீனாவில் அரசுக்கு எதிரான போராட்ட செய்தியை படம் பிடித்த பிரபல தனியார் செய்தி நிறுவன நிருபரை கைது செய்து அடித்து, உதைத்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
உலக நாடுகளில் இரண்டரை ஆண்டுகளாக தீவிர அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக சீனாவில் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்டது.
அதன் பின்னர் உலக நாடுகளில் பல்வேறு அலைகளாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. எனினும், கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளால் பிற நாடுகளை விட முன்பே பரவலை சீனா கட்டுப்படுத்தி இருந்தது சர்வதேச நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, சீனாவில் புதிதாக கடந்த 24 மணிநேரத்தில் நேற்று 40 ஆயிரத்திற்கு சற்று குறைவாக, 39,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அவர்களில் 36,082 பேர் அறிகுறியற்றவர்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் சுகாதார ஆணையம் வெளியிட்டது. இந்த எண்ணிக்கையானது அதற்கு முந்தின நாள் 35,183 ஆக இருந்தது.
இதனால், சீனாவில் தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டது. தொடர்ந்து, 4 நாட்களாக கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கூடுதலாக பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் கொரோனா பாதிப்புக்கு மொத்த உயிரிழப்பு 5,233 ஆகவும், கடந்த 26-ந்தேதி வரை மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 802 பேருக்கு உறுதி செய்யப்பட்டும் உள்ளது.
கொரோனா அதிகரிப்பை முன்னிட்டு பல்வேறு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்து வருகிறது. அரசின் இந்த ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வியாழ கிழமையன்று ஜின்ஜியாங் மாகாண தலைநகரான உரும்கி நகரில் குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்தனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு வந்து சேருவதில் காலதாமதம் ஏற்படுத்தியது என இதுபற்றி ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படுத்தியது. அரசின் பூஜ்ய கொரோனா கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக கோரியும் மக்கள் போராட்டம் வெடித்தது.
இதில் ஒரு பகுதியாக ஷாங்காய் நகரில் நடந்த போராட்ட நிகழ்வை படம் பிடிக்க பிரபல தனியார் செய்தி சேனலான பி.பி.சி.யின் நிருபர் எட் லாரன்ஸ் என்பவர் சென்றுள்ளார். அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
அதன்பின்பு, அவர் அடித்தும், உதைத்தும் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டு உள்ளார். ஒரு நம்பிக்கை வாய்ந்த பத்திரிகையாளராக லாரன்ஸ் பணியாற்றிய சூழலில் அவர் மீது கொடூர தாக்குதல் நடந்து உள்ளது என பி.பி.சி. சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுபற்றி பி.பி.சி வெளியிட்ட அறிக்கையில், சீன அதிகாரிகளிடம் இருந்து அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது மன்னிப்போ இதுவரை எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
எங்களது நிருபரை விடுவித்த அதிகாரிகள் கூறும்போது, கூட்டத்தில் சென்ற நிருபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விட கூடாது என்ற அவரது நலனுக்காகவே நிருபரை கைது செய்தோம் என தெரிவித்து உள்ளனர். இதனை நம்பகத்தன்மை வாய்ந்த ஒன்றாக நாங்கள் எடுத்து கொள்ளவில்லை என அறிக்கை தெரிவிக்கின்றது.