< Back
உலக செய்திகள்
பிலிப்பைன்ஸ் அதிபருடன் அமெரிக்க மந்திரி சந்திப்பு: முக்கிய ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் அதிபருடன் அமெரிக்க மந்திரி சந்திப்பு: முக்கிய ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து

தினத்தந்தி
|
3 Feb 2023 2:54 AM IST

இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவும், பிலிப்பைன்சும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன.

மணிலா,

பரபரப்பானதும், வளங்கள் நிறைந்ததுமான தென் சீன கடல் தொடர்பாக வியட்நாம், மலேசியா, புருனே மற்றும் தைவானுடன் சீனாவும், பிலிப்பைன்சும் உரிமை கொண்டாடி வருகின்றன. இதனால் அங்கு எப்போதுமே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

அமெரிக்கா, எந்த உரிமையும் கொண்டாடாத நிலையில், தனது போர்க்கப்பல்கள், கண்காணிப்பு விமானங்களை அந்த பகுதியில் ரோந்து அனுப்புகிறது. இது வழிசெலுத்தலின் சுதந்திரத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் மேம்படுத்துவதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இது சீனாவை கோபப்படுத்தி உள்ளது.

இந்த தருணத்தில் அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா சென்று அந்த நாட்டின் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே முக்கிய ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் பிலிப்பைன்சின் மேலும் 4 ராணுவ முகாம்களுக்கு அமெரிக்கப்படைகள் செல்வதற்கு அனுமதி அளிக்கிறது. இது அதிகரித்து வரும் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான தடுப்பை அதிகரிக்க உதவும்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவும், பிலிப்பைன்சும் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில், பிலிப்பைன்சின் 5 ராணுவ முகாம்களில் உள்ள திட்டங்களில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் அமெரிக்க படைகள் செல்வதற்கு பிலிப்பைன்ஸ் அதிகாரிகள், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் அனுமதி வழங்கினர். அங்கு தற்போது அமெரிக்க படைகளுக்கான கட்டுமானம் நடந்து வருகிறது.

கடந்த ஜூன் மாதம் பிலிப்பைன்ஸ் அதிபராக பதவி ஏற்றதில் இருந்து பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை வளர்க்க நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்