அமெரிக்காவில் கற்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 19 சதவீதம் அதிகரிப்பு
|அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2021-2022-ம் ஆண்டில் 19 சதவீதம் அதிகரித்து உள்ளது.
நியூயார்க்,
கொரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாக உலக நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. இந்த சூழலில், வெளிநாடுகளில் படித்து வந்த பலரும் பாதுகாப்பை முன்னிட்டு சொந்த நாடுகளுக்கு திரும்பும் சூழலும் ஏற்பட்டது. அவர்களில் இந்திய மாணவர்களும் அடங்குவர்.
இதுதவிர, உக்ரைன் போரில், அந்நாட்டில் சிக்கிய இந்திய மாணவர்கள் மற்றும் வங்காளதேசம் உள்ளிட்ட அண்டை நாட்டு மாணவர்களையும் இந்தியா மீட்டு சொந்த நாடு வந்துசேர உதவியது.
எனினும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து படிக்கும் சூழலும் உள்ளது. அந்த வகையில், அமெரிக்காவில் 9.14 லட்சம் சர்வதேச மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர்.
சமீப ஆண்டுகளில், அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியா உயரிய வளர்ச்சி அடைந்து சாதனை படைத்து உள்ளது. இதனால், அமெரிக்காவில் படிக்க கூடிய மாணவர்களின் எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்து 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்த தகவலை ஓபன் டோர்ஸ் என்ற விரிவான தகவல் சேகரிப்பு அமைப்பு அறிக்கையாக வெளியிட்டு உள்ளது.
அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்கள் மற்றும் வெளிநாடுகளில் படிக்கும் அமெரிக்க மாணவர்கள் பற்றிய தகவல்களை இந்த அமைப்பு சேகரித்து வைத்துள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டு மேல்படிப்பு படிக்க சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 1,67,582 ஆக இருந்தது. அவர்களில் பெருமளவில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணித பாடங்களை தேர்ந்தெடுத்து உள்ளனர்.
எனினும், வர்த்தகம் மற்றும் மேலாண்மை, சமூக அறிவியல் மற்றும் கல்வி ஆகியவையும் சர்வதேச மாணவர்கள் இடையே பிரபலமடைந்து காணப்படுகிறது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.