அமெரிக்கா: நடப்பு ஆண்டில் 9-வது சம்பவம்; இந்திய மாணவர் மரணம்
|இந்திய மாணவர் மரணம் பற்றிய முதல்கட்ட விசாரணையில், சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் இல்லை என இந்திய தூதரகம் தெரிவித்தது.
நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், போஸ்டனில் உள்ள அபிஜீத் பருசுரு என்ற இந்திய மாணவர் துரதிர்ஷ்டவச வகையில் மரணம் அடைந்துள்ளார் என்பது அறிந்து ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கின்றோம். இதுபற்றிய முதல்கட்ட விசாரணையில், சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் இல்லை என தெரிவித்தது.
பருசுருவின் பெற்றோர் கனெக்டிகட் பகுதியில் வசிக்கின்றனர். அவர்கள் அதிகாரிகளுடன் நேரடி தொடர்பில் உள்ளனர். அவருடைய உடலை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை, ஆவண சரிபார்ப்பு உள்ளிட்ட விசயங்களில் உதவி செய்தோம் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஆந்திர பிரதேசத்தின் தெனாலி நகரில் பருசுருவின் இறுதி சடங்குகள் முன்பே நடத்தப்பட்டு விட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை எண்ணற்ற இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளி மாணவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.
சமீபத்தில், இந்தியாவின் தெலுங்கானாவை சேர்ந்த வெங்கட்ரமண பித்தலா (வயது 27) என்பவர் தண்ணீர் ஸ்கூட்டர் எனப்படும் ஜெட் ஸ்கை ஒன்றை வாடகைக்கு எடுத்து கொண்டு சென்றபோது, விபத்தில் சிக்கி பலியானார்.
இந்தியாவை சேர்ந்த அமர்நாத் கோஷ் (வயது 34) என்ற பரதநாட்டிய நடன கலைஞர், செயின்ட் லூயிஸ் பகுதியில் சமீபத்தில் சுட்டு கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில், வர்த்தக படிப்பு படித்து வந்த ஸ்ரேயாஸ் ரெட்டி பெனிகர் (வயது 19) என்பவர் கடந்த பிப்ரவரியில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். எனினும், இதில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை என உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.
இதேபோன்று, இண்டியானா மாகாணத்தில், பர்டியூ பல்கலைக்கழக மாணவரான நீல் ஆச்சாரியா என்ற மற்றொரு இந்திய மாணவர் கடந்த ஜனவரி 28-ந்தேதி காணாமல் போனார். அதன்பின் சில நாட்களில் அவர் மரணம் அடைந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன் கடந்த ஜனவரி 16-ந்தேதி ஜார்ஜியா மாகாணத்தின் லித்தோனியா நகரில் எம்.பி.ஏ. படித்து வந்த மாணவர் விவேக் சைனி (வயது 25) என்பவர், போதை ஆசாமி ஒருவரால் சுத்தியலால் அடித்து கொல்லப்பட்ட கொடூரம் நடந்தது. சைனி பணிபுரிந்து வந்த கடையில், தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்த நிலையில், பதிலுக்கு அந்த நபர், 50-க்கும் மேற்பட்ட முறை சுத்தியலால் தாக்கியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே சைனி உயிரிழந்து விட்டார்.
இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த அகுல் பி. தவான் (வயது 18) என்பவர் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்து கிடந்துள்ளார். அவருக்கு உடல் வெப்ப இழப்பு என்ற ஹைப்போதெர்மியா பாதிப்புகளுக்கான அறிகுறிகள் இருந்துள்ளன.
சமீர் காமத் (வயது 23) என்ற இந்திய மாணவர் வாரன் கவுன்டி பகுதியில் கடந்த பிப்ரவரியின் முற்பகுதியில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதேபோன்று, இந்தியரான சையத் மஜாகீர் அலி என்ற ஐ.டி. மாணவர் ஒருவர் சிகாகோ நகரில் கடந்த பிப்ரவரி 4-ந்தேதி மர்ம நபர்களால் துரத்தி, துரத்தி தாக்கப்பட்டார்.
இண்டியானா வெஸ்லியான் பல்கலைக்கழகத்தில் ஐ.டி. பிரிவில் முதுநிலை படிப்பை படித்து வந்த அலி, அவருடைய வீடு அருகே நடந்து சென்றபோது, 3 பேர் அவரை விரட்டியுள்ளனர். இதில், மூக்கு, முகம் உள்பட பல இடங்களில் ரத்த காயங்கள் ஏற்பட்டன. இதுபற்றி வீடியோக்களும் சமூக ஊடகத்தில் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தின.