ஐஓஎஸ் செயலியை உருவாக்கிய 9 வயது இந்திய சிறுமிக்கு ஆப்பிள் சிஇஓ டிம் குக் பாராட்டு..!!
|ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் ஐஓஎஸ் செயலியை உருவாக்கிய 9 வயது இந்திய சிறுமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
துபாய்,
ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக், துபாயில் வசித்துவரும் இந்தியாவைச் சேர்ந்த சிறுமியை பாராட்டி மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். ஒன்பது வயதான சிறுமி ஹானா முகமது ரபீக், குழந்தைகள் தூங்குவதற்காகப் பெற்றோர்கள் கதை சொல்ல ஒரு தனிச் செயலியை உருவாக்கி இருக்கிறார்.
இந்த ஐ.ஓ.எஸ் (iOS) செயலியை ஐபோன்களுக்காக ஹானா உருவாக்கியிருக்கிறார். உலகின் மிக இளம் வயதுடைய ஐ.ஓ.எஸ் டெவலப்பராகத் தன்னை அறிமுகம் செய்து கொண்டு சிறுமி ஹானா, ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம்முக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.
ஹானா அனுப்பிய மின்னஞ்சலில், இந்தச் செயலிக்காகத் தானே பத்தாயிரம் வரிகள் கோடிங் எழுதியதாக குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு டிம் அனுப்பிய பாராட்டு மின்னஞ்சலில், " ஹானா, இவ்வளவு இளம் வயதில் நீங்கள் சிறந்த சாதனைகளை படைத்ததற்கு வாழ்த்துக்கள். நீங்கள் விடாமுயற்சியுடன் இதே போல் உழைத்தால், எதிர்காலத்தில் நீங்கள் நம்பமுடியாத விஷயங்களைச் சாதிப்பீர்கள்" என தெரிவித்துள்ளார்.
டிம் குக்கின் வாழ்த்து செய்தியால் நெகிழ்ச்சியடைந்த ஹானாவின் பெற்றோர், 9 வயதான ஹானாவின் அக்கா லீனா பாத்திமா தான் ஹனாவுக்கு கோடிங் ஆசிரியர் என்றும் தெரிவித்துள்ளனர். 9 வயதில் கோடிங் கற்றுக் கொண்டு செயலியை உருவாக்கியுள்ள ஹானாவுக்கு பல தரப்பினரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.