< Back
உலக செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் படகுடன் விடுவிப்பு..!
உலக செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் படகுடன் விடுவிப்பு..!

தினத்தந்தி
|
20 Jun 2023 2:52 PM IST

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் படகுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு,

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் படகுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். படகில் பழுது ஏற்பட்டதால் ராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு இலங்கை நெடுந்தீவு பகுதிக்கு சென்றுள்ளது. 9 மீனவர்களை பிடித்த இலங்கை கடற்படையினர் விசாரித்ததில் படகு பழுதானது தெரியவந்தது. மனிதாபிமான அடிப்படையில் படகை இலங்கை கடற்படை பழுதுநீக்கி 9 மீனவர்களையும் விடுவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுவிக்கப்பட்ட 9 மீனவர்கள் விரைவில் தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கின் முழுவிவரம்:-

ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை மீன்வளத்துறை அதிகாரிகளின் அனுமதி பெற்று 558 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். தங்கச்சிமடத்தை சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் உள்பட 9 பேர் சென்றார்கள்.

அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்த போது, அவர்களுடைய படகு பழுதாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து 9 மீனவர்களும் படகுடன் நடுக்கடலில் இருந்துள்ளனர். பழுதான அவர்களது படகு காற்று காரணமாக நெடுந்தீவு பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களின் படகை பார்த்தனர். இதையடுத்து படகை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், படகில் இருந்த ராமேசுவரம் மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். படகு பழுதானதால் அங்கு வந்துவிட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இருந்த போதிலும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகின் உரிமையாளர் அந்தோணி, சேசு ராஜா, ரூபன், முத்து, ஜான்சன், லெனின், பிரகதீஷ், ஜேக்கப், மற்றொரு அந்தோணி ஆகிய 9 பேரையும் கைது செய்தனர். பின்பு மேல் விசாரணைக்காக அவர்களை இலங்கைக்கு அழைத்து சென்றனர். மேலும் அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்